×

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல உரிய ஆவணங்கள் இருந்தால் அடுத்த நொடியே இ-பாஸ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னை: தகுதியான காரணம் மற்றும் உரிய ஆவணங்களுடன் அணுகினால் அடுத்த நொடியே இ-பாஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட கொளத்தூர் சீனிவாச நகரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டு, களப்பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகளை வழங்கினார். அவருடன், திருவிக நகர் மண்டல சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி அரவிந்த், வருவாய்த்துறை அலுவலர் அருணா மற்றும் மண்டல அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிற்கு கொடுத்த முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் தளர்வுடன் கூடிய ஊரடங்கிற்கும் வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதில் 90 சதவீதம் மக்கள் பங்களிப்பே முக்கியம். நோய் தொற்றில் முதலிடத்தில் இருந்த திரு.வி.க நகர் தற்போது ஏழாவது இடத்திற்கு வந்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கத்தான் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தகுதியான காரணங்களுடன் உரிய ஆவணங்களுடன் அணுகினால் அடுத்த நொடியே இ-பாஸ் வழங்கப்பட்டு விடும். அதில் மோசடியில் ஈடுபடுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு பாரத் நெட் டெண்டரை ரத்து செய்ததற்கான காரணம் என்ன என்பதை நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம். உள்ளூர் உற்பத்தியாளர்கள் பங்கேற்க வேண்டும் என்ற காரணத்தினாலே மத்திய அரசு பாரத் நெட் டெண்டரை ரத்து செய்தது. பாரத் நெட் பணிக்கு மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கின்றபோது இந்த பணி எந்த குறையும் இல்லாமல் முடிக்கப்பட்டுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : RB Udayakumar ,district , From District to District, Relevant Documents, Next Notice
× RELATED யானைப்பசிக்கு சோளப்பொரியா?...