கிருமி நாசினி தெளிப்பில் வீணடிக்கப்படும் அரசு பணம் கொரோனாவிலும் முறைகேடுகளில் சிக்கித்திணறும் தீயணைப்புத்துறை

* களப்பணியாளர்கள் உயிரிழப்பை மறைக்க பாராட்டு விழா நாடகம்

* முதல்வர் எடப்பாடிக்கு ஊழியர்கள் பரபரப்பு புகார் கடிதம்

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கிருமி நாசினி தெளிப்பில் அரசு பணம் வீணடிக்கப்படுவதாகவும், ஊழல் அதிகாரிகளை காப்பாற்றவும், களப் பணியாளர்களின் உயிரிழப்பை மறைக்கவும் கொரோனாவில் குணமாகி வந்தவர்களுக்கு பாராட்டு விழா நாடகம் நடத்தப்படுவதாகவும் துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, தீயணைப்பு ஊழியர்கள் முதல்வர் எடப்பாடிக்கு பரபரப்பு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். தமிழக தீயணைப்புத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தை பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

உலகமே கொரோனாவை கட்டுப்படுத்த முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளும் அல்லும்பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தீயணைப்புத் துறையிலோ தீயணைப்பு வீரர்களை கொண்டு அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் கொரோனா பாதித்த பகுதிகளில் தரமான பாதுகாப்பு கவசங்களை வழங்காமல் களமிறக்கி தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளித்து அதன்மூலம் களப்பணியாளர்கள் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் மறைக்கத்தான் தற்போது குணமாகி வந்தவர்களுக்கு  பாராட்டு விழா நடத்தி ஒரு கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டது. ஏனென்றால், கொரோனா தடுப்பு போராட்டத்தில் தீயணைப்பு துறையின் பங்களிப்பு அதிகம் இருப்பதாக வெளிப்படுத்தி அந்த வாய்ப்பை பயன்படுத்தி துறையில் தீ உரிமம் வழங்க தவறு செய்த அதிகாரிகளை உள்நோக்கத்துடன் காப்பாற்றும் வேலை மும்முரமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  

இதில், யாரும் கவனம் செலுத்தக் கூடாது என்பதால்தான் தீயணைப்பு பணியாளர்களை பாதுகாப்பு நலனை கருத்தில் கொள்ளாமல் கொரோனா நோய் தீவிரத்தை பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் பணியிட மாறுதல் செய்தும் சில காலமாக குடும்பத்தைவிட்டு அலைக்கழிக்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் களப் பணியாளர்கள் பதவி உயர்வும் மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? இவையெல்லாம் துறையில் ஊழல் பேர்வழி அதிகாரிகளை காப்பாற்றும் செயல்பாடுகளில் எவருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவேதான். மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் கொரோனா கிருமி அழிக்கப்படுகிறது என்பதற்கான எவ்வித அறிவியல் பூர்வமான சான்றும் இல்லாமலேயே தொடர்ச்சியாக அரசு பணம் வீணாக்கப்படுகிறது.

மேலும் நிலைய தீயணைப்பு அலுவலர்களுக்கு அந்தந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும் என்று கட்டளை மட்டும் பிறப்பித்து அதற்கு சிறிய அளவில் மற்றும் மூலப்பொருட்களை வழங்கி தொடர்ச்சியாக கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யப்பட்டதால் கிருமி நாசினி தெளிக்க உரிய மூலப்பொருட்கள் வழங்காததால் நிலைய அலுவலர்கள் தங்களது ஊதியத்தில் இருந்து கிருமிநாசினியை விலை கொடுத்து வாங்கி ஊரில் தெளிக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதை இயக்குனரின் காதுக்கு கொண்டு போய் சேர்க்க எவருக்கும் துணிவில்லை. கிருமிநாசினி தெளிப்பது கட்டாயம் என்றால் அதற்குரிய மூலப்பொருட்களை தங்கு தடையின்றி வழங்கப்படுகிறதா என்பதை இயக்குனர் கவனிக்க தவறியதால் பல நிலைய அலுவலர்களின் ஊதியம் பெரும்பகுதி வீணாக செலவழிக்கப்பட்டு பெரும் பணக்கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இல்லையெனில், அதற்குரிய பணத்தை முன்பணமாக வழங்குவதற்காகவாவது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனவே இனியாவது தீயணைப்புத்துறை இயக்குனர் பணியாளர்களின் நலன்களில் அக்கறை செலுத்தப்பட வேண்டும். தரமான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட வேண்டும். துறையில் தீப் பாதுகாப்புகளை துச்சமென நினைத்து விதிமுறைகளை மீறி தீ உரிமங்கள் வழங்கிய மாவட்ட அலுவலர்கள் மீது வலுவான ஆதாரங்களுடன் பத்திரிகை செய்திகள் வெளிவந்த பின்னும் தீயணைப்பு துறை இயக்குனர் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மற்ற மாவட்ட அலுவலர்கள் தவறு செய்வதற்கு ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. ஒரு நேர்மையான தீயணைப்பு துறை இயக்குனர் இன்றுவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இனியாவது, காலம் தாழ்த்தாமல் முறைகேடுகளில் ஈடுபட்ட மாவட்ட அலுவலர் மற்றும் மற்ற உயர் அதிகாரிகள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பது தீயணைப்பு துறை மட்டுமல்லாது பொதுமக்களின் விருப்பமாகும்.

Related Stories: