வசூல் ராஜா பாணியில் கொரோனா தேவதைக்கு கட்டிப்பிடி வைத்தியம்: நெகிழ்ச்சி அளிக்கும் டாக்டரின் பெரிய மனது

பனாஜி: கோவாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகளை சமுதாயம் புறக்கணிக்காமல் ஏற்றுக் கொள்ள வலியுறுத்தி, டாக்டர் ஒருவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்பட பாணியில், அவர்களுக்கு ‘கட்டிப்பிடி வைத்தியம்’ கொடுத்து வழியனுப்பி வைக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் நடக்கிறது. கோவா மருத்துவ கல்லூரியின் மருத்துவப் பிரிவு தலைவராக பணியாற்றுபவர் டாக்டர் எட்வின் கோமஸ். இவரது தலைமையில், மார்காவ் இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் குழு பணியாற்றி வருகிறது. இவரது கண்காணிப்பின் கீழ் குணமடைந்து வீடு திரும்பும் கொரோனா நோயாளிகளை அவர் கட்டிப்பிடித்து வாழ்த்தி வழியனுப்புகிறார். அவர்களை `கோவிட் தேவதைகள்’ என்று குறிப்பிடுகிறார்.

கொரோனா பணியில் இருந்து, 98 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எங்கள் கண்காணிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களை கட்டிப்பிடித்து வழியனுப்புவதை வழக்கமாக்கி கொண்டேன். இந்த மூன்று மாதத்தில் 190 பேருக்கு கட்டிப்பிடி வைத்தியம் அளித்துள்ளேன். சமுதாயம் அவர்களை கொரோனா நோயாளி என புறக்கணிக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதினை இதன் மூலம் வலியுறுத்தி உள்ளேன். அவர்கள் கோவிட் தேவதைகள். அவர்களின் உடலில் தற்போது ஆன்டிபாடிஸ் இருப்பதால், அவர்களின் பிளாஸ்மாவைக் கொண்டு கொரோனா நோயாளிகளை குணப்படுத்தலாம்.மூச்சு திணறல் அறிகுறி உள்ளவர்களை மட்டும் காப்பாற்றுவது சற்று கடினமானது. ஆனால், அவர்கள் இந்த நிலையை கடந்து, குணமடைவதால் அவர்களுக்கு இதன் வலி தெரிகிறது. எனவே, பிற நோயாளிகளுக்கு இது குறித்த விவரங்களை தெரிவித்து நம்பிக்கை அளிக்கின்றனர். குணமடைந்த பிறகு இது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களை, கொரோனா மீட்புப் பணிகளில் அரசு ஈடுபடுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: