×

மத்தியப்பிரதேசத்தில் கொரோனா பாதித்தவரின் சடலம் மருத்துவமனைக்கு வெளியே வீச்சு: உயிருடன் ஆம்புலன்சில் போனவர் பிணமாக வந்தார்

போபால்: மத்தியப்பிரதேசத்தில் கொரோனா பாதித்தவரின் சடலத்தை மருத்துவமனைக்கு வெளியே வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் மின்விநியோக நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் கடந்த ஜூன் 23ம் தேதி சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

போபால் பிபுள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், கொரோனா உறுதி செய்யப்பட்டவுடன் சிராயு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பப்பட்டார். ஆனால், மீண்டும் அந்த ஆம்புன்ஸ் திரும்பி வந்தது.
அதில் இருந்து பாதுகாப்பு கவச உடை அணிந்த 2 ஊழியர்கள் இறங்கி, மின் ஊழியரின் சடலத்தை மருத்துவமனை வளாகத்தில் வீசி சென்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,
உயிரிழந்தவரின் மகன் கூறுகையில், “ திங்களன்று ஆம்புலன்சில் அழைத்து செல்லும்போது எனது தந்தை உயிரோடு இருந்தார். ஆம்புலன்ஸ் சிராயு மருத்துவமனையில் இருந்து ஏன் திரும்பி வந்தது என தெரியவில்லை.

அதில், எனது தந்தை சடலமாக எடுத்து வரப்பட்டுள்ளார். ஆம்புலன்சில் என்ன நடந்தது என தெரியவில்லை. இரண்டு மருத்துவமனைகளிலும் ஏதோ தவறு உள்ளது,” என்றார். இது குறித்து பிபுள்ஸ் மருத்துவமனை மேலாளர் உதய் சங்கர் கூறுகையில், “ஆம்புலன்ஸ் சிராயு மருத்துவமனைக்கு சென்றதும், அடுத்த 40 நிமிடங்களில் பின் திரும்பி வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வரும்போது ஐசியூ சீல் வைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. அவர்கள் ஸ்டெரச்சர் வேண்டும் என கூறினார்கள். அதை எடுத்து வருவதற்குள், மருத்துவமனைக்கு வெளியே அந்த ஊழியர்கள் உடலை வீசிவிட்டு சென்றனர்,” என்றார். இது தொடர்பாக கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிபுள்ஸ் மருத்துவமனையிடம் கலெக்டர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Tags : Coroner ,Madhya Pradesh ,hospital Coroner ,hospital , Madhya Pradesh, Corona victim, corpse hospital, discharged, ambulance alive, corpse
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்ட...