உள்ளாட்சித்துறை டெண்டர் தலையீடு விவகாரம் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க தயாரா? அமைச்சர் வேலுமணிக்கு திமுக சவால்

சென்னை: உள்ளாட்சித்துறை டெண்டரில் தலையிடுவதே இல்லை என்று வெளிப்படையாக அறிவித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க தயாரா என்று அமைச்சர் வேலுமணிக்கு, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் எழுப்பியது ஏதோ ஒரு நிர்வாக மாற்றம் குறித்து மட்டும் அல்ல. 17 ஆயிரம் கோடித் திட்டத்தினை நிறைவேற்றும் இடத்தில் ஏன் பணி நீட்டிப்புச் செய்த புகழேந்தியை நியமித்தீர்கள் என்று கேட்டார். அதற்குப் பதில் அளிப்பதாக கூறி அமைச்சர் வேலுமணி தன் மனம்போன போக்கில் அறிக்கை விடுவது அவருக்கு அவமானமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்குப் பெருத்த அவமானம்.

புகழேந்தி ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். அவர் எப்படி சிவில் பணிகளை- குறிப்பாக, சீர்மிகு நகரங்கள் என்று கூறக்கூடிய ஸ்மார்ட் சிட்டி பணிகளை கவனிக்க முடியும். அமைச்சர் வேலுமணி செய்த ஊழல் எவ்வளவு, எத்தனை டெண்டர்கள் அமைச்சருக்கு வேண்டியவர்களுக்கு போனது? ஒரு ரூபாய் கூட டெண்டரில் நான் சம்பாதிக்கவில்லை. நான் டெண்டரில் தலையிடுவதே இல்லை என்று வெளிப்படையாக அறிவித்து சி.பி.ஐ. விசாரணை க்கு ஒப்படைக்க அமைச்சர் வேலுமணி தயாரா?.

அல்லது குறைந்தபட்சம் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க நான் தயார் என்று அறிவிக்கும் திராணியும், தெம்பும் இருக்கிறதா, அப்படியொரு விசாரணை ஆணையம் அமைத்து-அந்த ஆணையம் உள்ளாட்சி துறை டெண்டர்களில் முறைகேடே நடக்கவில்லை என்று கூறிவிட்டால்- நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன். “ஊழல் நடந்திருக்கிறது” என்று சொல்லி விட்டால்- வேறு வழக்கு விசாரணை இல்லாமலேயே நான் ஜெயிலுக்குப் போகத் தயார் என்று வேலுமணி அறிவிக்கத் தயாரா? இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: