×

சென்னையில் நோய் தொற்று அதிகரிப்பு எதிரொலி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 158ஆக உயர்வு

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த தெரு முழுவதையும் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வந்தது. இந்நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவே ஒரு தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாடு பகுதியாக தற்போது அறிவிக்கப்படுகிறது.

இதனால் சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. 200க்கும் மேல் இருந்த கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 60 ஆக இருந்தது. பின்னர் மீண்டும் படிப்படியாக கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து, கடந்த வாரம் 143 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களில் ஒரு குறிப்பிட்ட தெருவில் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 50 கட்டுப்பாடு பகுதிகள் உள்ளன.

இதற்கு அடுத்தபடியாக அண்ணாநகர் மண்டலத்தில் 43 பகுதிகளும்,  கோடம்பாக்கம் மண்டத்தில் 10 பகுதிகளும், வளசரவாக்கம் மண்டலத்தில் 13 பகுதிகளும், அடையாறு மண்டலத்தில் 9 பகுதிகளும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 8 பகுதிகளும், திரு.வி.நகர் மண்டலத்தில் 7 பகுதிகளும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 12 பகுதிகளும், அம்பத்தூர் மண்டலத்தில் 13 பகுதிகளும் நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 14 நாட்கள் இந்த பகுதிகளில் புதிய தொற்றுகள் பதிவு ஆகாமல் இருந்தால் இந்த பகுதிகளில் கட்டுப்பாடு விலக்கி கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : areas ,epidemic ,Chennai , Madras, infection, increase, restricted area, number to 158, rise
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்