×

கொரோனாவில் இருந்து குணமடைந்த 14 ஆர்பிஎப் போலீசார் பிளாஸ்மா தானம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி 6 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கையாக எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனிடையே, தமிழகத்தில் வசித்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக, ரயில்வே நிர்வாகம்  சிறப்பு ரயில்களை இயக்கியது. இப்பணியில், மாநகராட்சி ஊழியர்கள், ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் ஈடுபட்டனர். இதில், ரயில்வே மற்றும் ஆர்பிஎப் போலீசார் என 150க்கும் மேற்பட்டோருக்கு கொரேனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில் 36 போலீசார் ஏற்கனவே சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்களை தொடர்ந்து மேலும் 16 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்து நேற்று பணிக்கு திரும்பினர். அவர்களை தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பிரேந்திர குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த 14 ஆர்பிஎப் போலீசார் பிளாஸ்மா தானம் செய்தனர். அவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும், பழங்கள், ஓமியோபதி மருந்துகள், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Tags : RPF ,Corona , Corona, healed, 14 RPF cops, plasma donor
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...