×

தமிழக அரசு பரிந்துரைத்த சித்த மருந்தை மத்திய அரசு பரிசோதித்து ஆக.3க்குள் அறிக்கை தர வேண்டும்

* ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
* குறைவான நிதி ஒதுக்குவதாக கண்டனம்

மதுரை: தமிழக அரசு பரிந்துரைத்த சித்த மருந்தை பரிசோதித்து ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனாவை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய ‘இம்ப்ரோ’ என்ற சித்த மருந்தை கண்டுபிடித்துள்ளேன். இந்த மருந்தை, நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர், நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பை தடுக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட சித்த மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்விற்கு அதிகளவு நிதியை செலவிட்டாலும், இதில், 90 சதவீதம் நவீன மருத்துவத்திற்கே செலவிடப்படுகிறது. ஆனால், இந்திய மருத்துவ முறைகளுக்கான நிதி போதுமானதாக இல்லை.

கடந்த 2020-21ல் ஆயுஷ் துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சித்த மருத்துவத்திற்கு தனியாக நிதி இல்லை. நம் சித்தர்களும், மூதாதையர்களும் மனித நல்வாழ்விற்கு தேவையான ஏராளமான மருந்துகளை நமக்கு தந்துள்ளனர். நாகரிக பாஸ்ட் புட் காலத்தில், பாட்டி வைத்தியம் என்ற பண்டைய வைத்திய முறை குறைந்து கொண்டே போகிறது. சித்த மருத்துவம் என்பது மூலிகை, தாது மற்றும் கனிமங்களைக் கொண்டது. நமது அன்றாட உணவில் பல மூலிகைகள் உள்ளது. இவை, இயற்கையாக நோய் எதிர்ப்பு திறனை கொண்டவை. இதனால் தான் ஆயுஷ் அமைச்சகமும் பரிந்துரைத்துள்ளது.

கேரளாவில் ஆயுர்வேத முறையை பின்பற்றுகின்றனர். தமிழகத்தில்  டெங்கு பரவியபோது, நிலவேம்பு குடிநீர் பெரும் பங்கு வகித்தது. தற்போது கபசுர குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. நவீன மருத்துவ செலவோடு ஒப்பிடும்போது இயற்கை மருத்துவ முறையே சிறந்தது. சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற்ற பலர் குணமடைந்துள்ளனர். சித்தா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அரசு ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை. மத்திய, மாநில அரசுகள் மருத்துவ காப்பீட்டிற்காக அதிக நிதி ஒதுக்குகின்றன. முறையான ஆராய்ச்சி மற்றும் அங்கீகரித்தலின் மூலமே காப்பீட்டிற்கான செலவை குறைக்க முடியும். பொது முடக்கத்தால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட இழப்பையும் கணக்கிட முடியாது. ஏனெனில், ‘எதைத்தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலையிலேயே ஒவ்வொருவரும் உள்ளனர்.

நவீன மருத்துவத்தின் பல மருந்துகள் பல மூலிகைகளை கொண்டுள்ளது. குறிப்பாக மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லியில் இருந்து மருந்து தயாரித்துள்ளனர். சித்த மருத்துவ முறைகளில் இன்னும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நவீன மருந்துகள் அனைத்தும் காப்புரிமை பெற்றதைப்போல அனைத்துவிதமான மருந்துகளும் காப்புரிமை பெற்று அனைத்து மருந்துக்கடைகளிலும் கிடைக்க வேண்டும். சித்த மருத்துவ முறை நமக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் வரப்பிரசாதம். போலி தயாரிப்புகளை கட்டுப்படுத்த முறையான வழிகாட்டுதல் தேவை. இம்ப்ரோ மருந்தை மத்திய சுகாதாரத்துறை செயலர், மத்திய சித்தா மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியோர் உடனடியாக பரிசோதித்து, உரிய மேல் நடவடிக்கை எடுத்தது தொடர்பான அறிக்கையை ஆக.3க்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Central Government ,Siddha ,Government of Tamil Nadu , Tamil Nadu Government, Siddha Medicine, Central Government, Examined, Aug 3, Report
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...