×

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கைது மன வளர்ச்சி குன்றியவர் மீதான வழக்கு ரத்து: இயந்திரத்தனமாக செயல்பட்டதாக போலீசாருக்கு நீதிபதி கண்டனம்

மதுரை: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதாக கைதான மனவளர்ச்சி குன்றியவர் மீதான வழக்கை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கிச்சூட்ைட கண்டித்தும் கடந்த 22.5.2018ல் மதுரை மேலவெளி வீதி மற்றும் ஆர்எம்எஸ் ரோடு பகுதியில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததாகவும் கூறி, 28 பேர் மீது திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில், மதுரை ஜேஎம் 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தற்போது இவ்வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வழக்கில் 7வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மதுரை, சொக்கலிங்க நகரைச் சேர்ந்த மனவளர்ச்சி குறைந்த வாலிபர், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். அந்த மனுவில், “நான் மனவளர்ச்சி குறைந்தவன். தொடர் சிகிச்சையில் உள்ளேன். அரசியல், ேபாராட்டம் குறித்து எந்த விபரமும் எனக்கு தெரியாது. எதேச்சையாக போராட்டம் நடந்ததை வேடிக்கை பார்த்தேன். ஆனால், முறையாக விசாரிக்காமல் என்னையும் கைது செய்து வழக்கில் சேர்த்து விட்டனர். எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் மனவளர்ச்சி குறைந்தவர். தொடர் சிகிச்சையில் உள்ளார். போலீசார் எவ்வித முறையான விசாரணையின்றி அவசர கதியில் கைது செய்துள்ளனர். பின்னர், இவ்வழக்கில் இயந்திரத்தனமாக செயல்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே நடந்த விசாரணையின்போது மனுதாரரும், புகார்தாரரும் ஆஜராகியுள்ளனர். மனுதாரர் மேஜராக இருந்தாலும், மனதளவில் இன்னும் மைனர் சிறுவனாகவே உள்ளார். இதற்கு போதுமான சான்றுகள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Tags : Cancellation ,protest ,Judge ,anti-Sterlite , Sterlite, protest, arrest, mental retardation, case cancellation, police, judge condemned
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...