தேமுதிகவில் இருந்து அதிமுகவில் இணைந்த மதுரை மாஜி எம்எல்ஏ சுந்தரராஜன் மரணம்: கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்குள் உடல் அடக்கம்

மதுரை: மதுரை, சொக்கிகுளத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன் (62). விஜயகாந்த்தின் நண்பராக இருந்து, அவரது ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர். விஜயகாந்த் தேமுதிக கட்சி துவங்கிய பின் சுந்தரராஜனுக்கு மாநில பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. அதிமுக - தேமுதிக கூட்டணியில்,  கடந்த 2011ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2016ல் அதிமுகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். திடீரென நேற்று முன்தினம் இரவு இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு வரவில்லை. இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் அவர் இறந்தார். கொரோனா இறப்புக்கு தருவது போல், உடல் பாதுகாப்பாக துணியால் சுற்றப்பட்டு  குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாலையில் மதுரை தத்தனேரியில் உடல்  அடக்கம் செய்யப்பட்டது. சுந்தரராஜனுக்கு நாகேஸ்வரி என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

Related Stories: