×

வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகள் அடித்ததில் மேலும் ஒருவர் உயிரிழப்பு: ஐகோர்ட் கிளையில் தாய் மனு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான போலீசார் தாக்கியதில் தனது மகனும் உயிரிழந்ததாகவும், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும், தாய் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 28ம் தேதி அதிரடியாக அறிவித்தார். ஆனால், சிபிஐ விசாரணைக்கு தாமதமாகும் என்று கூறி சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்ஸ்பெக்டர், 2 சப்இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட போலீசார் தாக்கியதில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த வடிவு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மூத்த மகன் துரை, 2வது மகன் மகேந்திரன். எனது மகன்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம், பாப்பான்குளத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி வேலைக்கு சென்றனர். தூத்துக்குடி, தெற்கு பேய்க்குளம் அருகே ஜெயக்குமார் என்பவர் மர்மக்கும்பலால் கடந்த மே 18ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கொலையான ஜெயக்குமாரின் தம்பி ஆளிகுமார், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ  9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த மே 22ம் தேதி சாத்தான்குளம் எஸ்ஐ ரகு கணேஷ் உள்பட சில போலீசார், மூத்த மகன் துரையை தேடி வீட்டிற்கு வந்தனர். ஜெயக்குமாரின் கொலை சம்பந்தமாக துரை மீது சந்தேகம் உள்ளது எனக்கூறி, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்ல வேண்டும் என்றனர். ஆனால் சம்பவம் நடந்ததாக கூறிய பேய்க்குளம், பாப்பான்குளத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரமாகும். பின்னர் பாப்பான்குளத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு கடந்த மே 23ம் தேதி சென்றனர். அப்போது துரை வீட்டில் இல்லாததால், அங்கிருந்த 2வது மகன் மகேந்திரனை போலீசார் வீட்டிற்கு வெளியே இழுத்துச்சென்று, சட்டவிரோதமாக தாக்கி  காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
காவல்நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகு கணேஷ் உள்ளிட்டோர் மகேந்திரனை தலை, உடல் முழுவதும் பலமாக தாக்கியுள்ளனர்.

பின்னர் மே 24ம் தேதி இரவு மகேந்திரன் காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது, போலீசார், அவரிம் தற்போது காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து உயரதிகாரிகளிடம் எவ்வித புகாரும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியுள்ளனர். போலீசார் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. சில நாட்களுக்குப்பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார், அங்கு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜூன் 13ம் தேதி சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்.

பின்னர் அப்பகுதி மக்கள் ஆதரவுடன், எனது மகன் காவல்நிலையத்தில் சட்டவிரோதமாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சம்பந்தமாக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர், கலெக்டரிடம் கடந்த ஜூன் 20ம் தேதி புகார் அளித்தோம், ஆனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. சட்டவிரோதமாக என் மகனை காவல் நிலையம் அழைத்துச்சென்று தலை மற்றும் உடலில் தாக்கிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகு கணேஷ் ஆகியோர் மீதான சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பந்தமாக ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. எனவே, எனது மகன் மகேந்திரனை சட்டவிரோதமாக காவல்நிலையம் அழைத்துச்சென்று தாக்கியது, இதில் அவர் உயிரிழந்தது தொடர்பாகவும் விசாரணை செய்ய உயரதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.


* வியாபாரிகள் கொலை வழக்கு சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி: எடப்பாடி கோரிக்கையை அமித்ஷா ஏற்றார்
சாத்தான்குளத்தில் வியாபாரிகள் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) விசாரிக்க முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தற்போது அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து, சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு விரைவில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட உள்ளது.

Tags : police officers ,Sathankulam , Murder of merchants, Arrests, Satanic police officers, Death of one, Icort branch, Mother petition
× RELATED படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி...