×

ரூ.13.5 கோடி தங்கம் கடத்திய விவகாரம் கேரள முதல்வரின் முதன்மை செயலர் மாற்றம்: தில்லுமுல்லு பெண் அதிகாரியுடன் தொடர்பு அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  தங்கம் கடத்திய வழக்கில் தேடப்படும் பெண் அதிகாரி சொப்னா சுரேஷுடன் தொடர்பு வைத்திருந்ததாக கேரள முதல்வரின் முதன்மை செயலாளர் சிவசங்கர் அதிரடியாக மாற்றப்பட்டார். வளைகுடா நாடுகளில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.13.5 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம், 2 நாட்களுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இந்த தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்த சரித்குமார் கைது செய்யப்பட்டார். விசாரணையில், தூதரக நிர்வாக செயலாளராக பணியாற்றிய சொப்னா சுரேஷுக்கும் இந்த கடத்தலில் பங்கு இருப்பது தெரியவந்தது. இதனால், தற்போது கேரள அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையில் செயலாக்க மேலாளராக பணியாற்றி வரும் சொப்னா தலைமறைவானார். இதையடுத்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

இந்த கும்பல் ஏற்கனவே 10 முறை  தங்கம் கடத்தி இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.  சொப்னாவை காப்பாற்ற முதல்வர் அலுவலகத்தில் இருந்து முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பல முக்கிய அரசியல் பிரமுகர்கள்,  உயர் அதிகாரிகளுடன் தொடர்பு இருக்கிறது. இவர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்  துறை செயலாளரும், முதல்வரின் முதன்மை செயலாளருமான சிவசங்கர் உடனான நெருங்கிய தொடர்பால், ஐடி துறையில் விண்வெளிப் பூங்கா பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார். அரசு சார்பில் உயரதிகாரிகள், ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும்போது சொப்னாவும்  சென்று வந்துள்ளார்.  

இவருடைய வீட்டிற்கு அடிக்கடிசென்று வரும் அளவிற்கு சிவசங்கர் நெருக்கமாக இருந்துள்ளார். சொப்னாவுடன்  பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.  இதனால், தங்கம் கடத்தலில் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் நிலவுகிறது. இவர் மீதான குற்றச்சாட்டால் முதல்வர் பினராய் விஜயனுக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிவசங்கர் நேற்று முதன்மை செயலாளர் பதவியில் இருந்தும், ஐடி செயலாளர் பொறுப்பில் இருந்தும்  அதிரடியாக மாற்றப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தும்படி முதல்வர் பினராய் விஜயன்உத்தரவிட்டுள்ளார். தங்கம் கடத்தலில் கேரள அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

1. ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றியபோது அங்கு பணியாற்றிய உயரதிகாரி மீது பாலியல் புகார் கூறினார். விசாரணையில், அது பொய் புகார் என்று தெரிய வந்தது. இதனால், சொப்னா மீது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

2. இதன் பிறகு, இவர் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில், நிர்வாக செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார். இங்கும் முறைகேடு செய்ததால், பணி நீக்கம் செய்யப்பட்டார்.

3. பின்னர், இவர் தனது செல்வாக்கால் கேரள அரசின் ஐடி துறையில்  நியமிக்கப்பட்டார்.

4.இவர், தனியாக ஒரு நிறுவனமும் நடத்தி வந்தார். இதை கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தான் தொடங்கி வைத்தார். இதன்மூலம், இவர் கேரள அரசின் பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.


Tags : Chief Secretary ,Kerala , 13.5 crores, gold smuggling affair, Kerala Chief Minister, Chief Secretary, Transfer
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...