×

திருச்சி சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கு வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதை கண்டித்து அடித்தேன்: சிக்கிய வாலிபர் திடுக் வாக்குமூலம்

திருச்சி: திருச்சி அருகே சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சிக்கிய வாலிபர் அளித்த வாக்குமூலத்தில், நாங்கள் பங்காளி உறவுமுறை என்பதால், சிறுமியுடன் பழகியதற்கு பெற்றோர் கண்டித்தனர். நான் அவள் வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதை கண்டித்து அடித்தேன் என போலீசில் கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் அல்லித்துறை அடுத்த அதவத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (45). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன். 2வது மகள் கங்காதேவி (14), 9ம்வகுப்பு தேர்ச்சி பெற்று 10ம் வகுப்பு செல்ல இருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அப்பகுதியில் உள்ள முள்காட்டை ஒட்டி இருந்த மர அறுவை மில் சுற்றுச்சுவர் அருகே வேட்டியால் மூடப்பட்டு கங்காதேவி பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கங்காதேவி, செல்போனில் கடைசியாக பேசிய அதே பகுதியை சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி செந்தில் (24), யோகலட்சுமி ஆகியோரை நேற்று பிடித்து ரசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், அதே பகுதியில் வசிக்கும் பங்காளி உறவு முறை உள்ள டைல்ஸ் தொழிலாளி செந்திலுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தெரிந்த சிறுமியின்  குடும்பத்தினர் இருவரையும்  கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் தாய் மகேஸ்வரி 100 நாள்  வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அக்கா, தம்பி, கங்காதேவி மட்டும் இருந்துள்ளனர். அப்போது வீட்டுக்கு வந்த செந்தில், வேறு ஒருவரிடம் ஏன் வெகுநேரமாக செல்போனில் பேசுகிறாய் என  கேட்டு திட்டியுள்ளார். அதன்பின் மதியம் முள்காட்டுக்கு வந்த கங்காதேவியிடம், நீ உன் அப்பா சொல்வதை கேள் என செந்தில் கூறிய போது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கங்காதேவியை அடித்தேன். வேறு ஒன்றும் செய்யவில்லை, நான் எந்த குற்றமும் செய்யவில்லை என செந்தில் கூறுகிறார். செந்தில் தாக்கியதில் கீழே விழுந்து கங்காதேவி  மயங்கியதால் பதற்றம் அடைந்த செந்தில், மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தாரா அல்லது உறவினர்கள் தவறாக பேசுவார்கள் என்ற மனவேதனையில் சிறுமியே  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை  நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

* யார் அந்த வினோத்?
போலீசில் செந்தில் கூறியது போல், சிறுமியிடம் வினோத் என்பவர் அடிக்கடி பேசியது குறித்து அவரின் செல்போன் எண்ணில் பதிவான எண்களை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வினோத்திடம் அதிகம் பேசாதே என்று கூறியே செந்தில் சிறுமியை திட்டியுள்ளார். அந்த வினோத் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Trichy ,death , Trichy, little girl burnt, prosecuted, trapped youth, affidavit
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்