×

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி என்ற பெயரில் ரூ7220 கோடி அன்னிய செலாவணி மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு

புதுடெல்லி: கொல்கத்தாவில் உள்ள நகைக்கடை நிறுவனம் ரூ.7220 கோடி அன்னியச்செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்து, சம்மன் அனுப்பியுள்ளனர். கொல்கத்தாவை மையமாக கொண்டு நகைக்கடை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 20 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 5 தனியார் வங்கிகளிடம் இருந்து ரூ.2,672 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு இருந்தது. இந்தியாவில் அதிக வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்டுள்ள 100 நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்று என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக சி.பி.ஐ., வருவாய் புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகள் இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களான 3 சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இதில் நிலேஷ் பரேக் என்ற நிர்வாகி கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் கடந்த 2018-ம் ஆண்டு நிதி மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனமும், அதன் இயக்குனர்களும் வெளிநாட்டு ஏற்றுமதி என்ற பெயரில் கோடிக்கணக் கில் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்து உள்ளனர்.

அந்தவகையில் ரூ.7,220 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்தின் (பெமா) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு இந்த நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பெமா சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இதுவரை நோட்டீஸ் அனுப்பிய சம்பவங்களில் இதுதான் மிகப்பெரிய தொகை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இந்த நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதால், சிபிஐயும் வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நகைக்கடை நடத்தி பல கோடி ரூபாய் அன்னியச்செலாவணி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி தப்பிச் சென்று விட்டார். அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்தநிலையில், மேலும் ஒரு நகைக்கடை நிறுவனம் ரூ.7220 கோடி மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Exports to Foreign, Foreign Exchange, Fraud, Jewelry Owners, Enforcement Department
× RELATED தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்...