×

லடாக் எல்லையில் ரூ.20,000 கோடி செலவில் நடக்கும் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

கார்கில்: லடாக் எல்லைப்பிரதேசத்தில் ரூ.20,000 கோடி செலவில் நடக்கும் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அவற்றை விரைந்து நிறைவேற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தவுலத் பேக் ஓல்டி நெடுஞ்சாலை உள்ளிட்டவை மேம்படுத்தப்படுகின்றன. அதேபோன்று எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில் 30 பாலங்களை அமைக்கும் பணியும் நடக்கிறது. இவை தவிர சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைகள் ஆகியன அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் எல்லைச் சாலை அமைக்கும் கழகத்தின் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

2023ம் ஆண்டுக்குள் 66 சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. சீனா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளை ஒட்டிய எல்லைக்கு விரைவில் ஆயுத தளவாடங்களை கொண்டு செல்ல வசதியாக இந்தியா சாலை, பாலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாகத்தான் கடந்த மாதம், சீனாவின் எல்லையையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில், கடல்மட்டத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் இருக்கும் லிபுலேக்கை இணைக்கும் வகையில் சுமார் 80 கி.மீ. தொலைவிற்கு புதிய சாலை திறக்கப்பட்டது.

இந்த சாலையை அமைத்ததால் ஆத்திரமடைந்த சீனா, நேபாளத்தை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அதேபோல, கிழக்கு லடாக் பகுதியில் 255 கி.மீ நீளமுள்ள தவுலத் பேக் ஓல்டி நெடுஞ்சாலையை இந்தியா சீரமைத்ததன் விளைவு தான், சீனாவின் ஊடுருவலுக்கு முக்கிய காரணமே. 13,000 அடி உயரத்தில் தொடங்கும் இந்த சாலை 16,000 அடி உயரம் வரை பயணிக்கிறது. இந்தியா- சீனா எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு நேர் இணையாக செல்லும் இந்த சாலை, கரகோரம் மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் தவுலத் பேக் ஓல்டி விமானத் தளத்தை, லடாக் ஒன்றியப் பகுதியோடு இணைப்பதால் ராணுவ மட்டத்தில் இந்த சாலை முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கரகோரம் மலை தொடர் லடாக் மற்றும் சீனாவின் சின்ஜியாங் உய்கர் தன்னாட்சி பிரதேசத்தை பிரிக்கிறது. இந்த சாலைகள் இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்பதால் சீனா பயப்படுகிறது. அதனால்தான் ஒருபக்கம் நேபாளத்தை தூண்டிவிட்டும், மறுபுறம் பாகிஸ்தானை சீண்டி விட்டும், லடாக்கில் ஊடுருவி இந்திய வீரர்களை தாக்கி நெருக்கடி கொடுத்து வருகிறது.



Tags : Rajnath Singh ,inspection ,Ladakh ,border , Ladakh, Rajnath Singh
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...