×

மார்த்தாண்டத்தில் சாலையில் ஓடும் அணை தண்ணீர்: கால்வாய் தூர்வாராததால் அவலம்

மார்த்தாண்டம்: பேச்சிப்பாறை அணை தண்ணீர் செல்லும் சிற்றாறு பட்டணம்கால்வாய் மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழி வழியாக செல்கிறது. இதில் ஒரு கிளை கால்வாய் சாங்கை, கோட்டகம், கல்லுதொட்டி, குளக்கத்தி, நந்தன்காடு வழியாக மார்த்தாண்டம் தெப்பகுளத்துக்கு வருகிறது. இந்த கால்வாய் தற்போது ஆக்ரமிக்கப்பட்டு அகலம் குறைந்து காணப்படுகிறது. மேலும் கால்வாய் தூர்வாரப்படாமலும், முறையாக பராமரிக்கப்படாமலும் காணப்படுகிறது. பல இடங்களில் கால்வாயில் சகதி, குப்பைகள் தேங்கி கிடப்பதால் நீர் பிடிப்பு பகுதி மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதனால் கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாமல் வீணாகி வருகிறது.

குறிப்பாக குளக்கத்தி பகுதியில் கால்வாய் நிரம்பி தண்ணீர் சாலையில் பாய்ந்து ஓடுகிறது. இது குறித்து பலமுறை புகார் கூறியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. இது குறித்து முன்னாள் கவுன்சிலர் ரத்தினமணி கூறியது: அணை தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடுவதற்கு முன் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிைலயில் குளக்கத்தி பகுதியில் தண்ணீர் சாலையில் ஓடி வீணாகிறது. எனவே கால்வாயை சீரமைத்து பழுதான பகுதிகளை செப்பனிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

Tags : Marthandam , Marthandam, dam water
× RELATED குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு