சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்; காரைக்குடியில் தொற்றுநோய் பரவும் அபாயம்: சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா

காரைக்குடி: மருத்துவமனைகளில் பயன்படுத்திய மருந்துபாட்டில்கள் உள்பட பல்வேறு கழிவுகளை சாலையோரங்களில் கொட்டி செல்வதால் பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. காரைக்குடி பகுதியில் 100க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய அளவிலான தனியார் கிளினிக்குகள் உள்ளன. இத்தகைய கிளினிக்குகள் நடத்த பயோமெடிக்கல் வேஸ்ட் சான்று பெற்றால் மட்டுமே உரிமம் என்ற விதிமுறை உள்ளதால், அனைத்து தனியார் கிளினிக்குகளும் முறையாக பயோ மெடிக்கல் வேஸ்டை அப்புறப்படுத்தி வருகின்றன. தஞ்சையை சேர்ந்த தனியார் நிறுவனம், கிளினிக்குகளில் பயோ மெடிக்கல் வேஸ்டை சேகரித்து செல்கின்றன.

இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் முறையாக உரிமம் பெறமால் செயல்படும் கிளினிக்குகள் மற்றும் அனுமதியின்றி சிகிச்சை அளிப்பவர்கள் இந்த மருத்துவ கழிவுகளை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொட்டிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். காரைக்குடி அருகே மானகிரியில் இருந்து திருச்சி பைபாஸ் செல்லும் சாலையில் சமூக விரோதிகள் சிலர் இதுபோன்ற மருத்துவ கழிவுகளை கொட்டி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது. இதுபோன்ற மருத்துவ கழிவுகளால் புதுவகையான தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘பயோ மெடிக்கல் வேஸ்டை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். பயன்படுத்திய மருந்துபாட்டில்கள் உடைந்து காலில் குத்த வாய்ப்புள்ளது. தவிர குளுக்கோஸ் பாட்டில்கள், அகற்றப்பட்ட உடல் உறுப்புகள், நோயாளிகளுக்கு பயன்படுத்திய துணிகள் ஆகியவற்றின் மூலம் நோய் தொற்று ஏற்படும். மருந்து பாட்டில்களை முறையாக ஆய்வு செய்தால் இது எந்த ஏஜென்சியில் இருந்து வாங்கப்பட்ட மருந்து என்பதை கண்டறிய முடியும். அவர்கள் மூலம் இந்த மருந்து யாருக்கு சப்ளை செய்யப்பட்டது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம். அலட்சியமாக விட்டுவிட்டால் புதுவிதமான தொற்றுநோய் பரவ காரணமாகிவிடும்’ என்றார்.

Related Stories: