புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை: முதல்வர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரி: கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சித்த வைத்திய முறையில் மருத்துவம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில், இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பரவலுக்கு சித்த வைத்திய முறையில் வைத்தியம் செய்யப்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் அலோபதி முறையில் மருத்துவம் செய்கின்றனர். சித்தா முறையில் மருத்துவம் செய்யும்போது மிக விரைவில் குணமடைவார்கள் என்ற எண்ணத்தைக் கருத்தில் கொண்டு ஆயுஷ் அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் கொடுப்பதற்கு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சித்த மருத்துவத்தில் சம்பந்தப்பட்டுள்ள மருத்துவர்களை அழைத்துப் பேசினோம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன மருந்துகள் கொடுக்க வேண்டும் என்று கேட்டு அவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனைகள் செயல்படக் கூறியுள்ளோம். சித்த மருத்துவர்களையும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். சித்த வைத்தியம் மூலமாக எந்தவித பக்கவிளைவும் இருக்காது. நோயாளிகளும் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற அளவில் சித்த வைத்திய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

இப்போது தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மரில் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்படுகிறது.

பரவலாக மருத்துவப் பரிசோதனை செய்வதன் மூலம் கொரோனா தொற்றை விரைவாகக் கண்டறிய முடியும். மேலும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கச் சொன்னால் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: