ராணிப்பேட்டை அரக்கோணத்தில் ஒரே தெருவை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...! மக்கள் பீதி!!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஒரே தெருவை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்துள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1193 ஆக உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 650 ஆக உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்தோரின் எண்ணிக்கை 538ஆக உள்ளது.

இதனால், கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக சமூக பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனாவின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அரசு அதிகாரிகளும், மருத்துவர்களும் திணறி வருகின்றனர். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க வீடுவீடாக சென்று உடல்நிலை குறித்து தகவல் சேகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை அரக்கோணத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஒரே தெருவை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட 20 பேரும் ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் வசித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து, அந்த பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: