விழுப்புரத்தில் குடிமராமத்து பணியின்போது பழங்கால விஷ்ணு சிலை கண்டெடுப்பு...! மக்கள் பூஜை செய்து வழிபாடு!!!

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே குடிமராமத்து பணியின்போது பழங்காலத்து விஷ்ணு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் கரிப்பாளையம் கிராமத்தில் உள்ள எட்டியான் குளத்தில் கடத்த 3 நாட்களாக குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. குளத்தின் மையப்பகுதியில் இன்று பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மண் அள்ளியபோது, திடீரென ஒரு சத்தம் கேட்டது. உடனடியாக பொக்லைன் ஓட்டுநர் பொறுமையாக மண்ணை அப்புறப்படுத்தினார்.

அப்போது அதிலிருந்து 4 அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன விஷ்ணு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அப்போது கண்டெடுக்கப்பட்ட சிலையின் ஒருபக்க கை உடைந்திருந்தது. குளத்தில் விஷ்ணு சிலை இருக்கும் தகவல் அப்பகுதியில் காட்டு தீயாக பரவியது. இத்தகவல் அறிந்த மரக்காணம் வட்டாட்சியர் ஞானம் அச்சிலையைப் பார்த்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும், இந்த விஷ்ணு சிலை சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக இருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார். பின்னர், அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த விஷ்ணு சிலையை மாரியம்மன் கோவிலில் வைத்து பாலபிஷேகம் நடத்தி, பூஜை செய்து வழிபட்டனர். மேலும், பொதுமக்கள் இந்த சிலையை இங்கேயே வைத்து வழிபட வேண்டும் என வாட்டாச்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தொல்லியல் துறை வந்து ஆய்வு செய்த பின்புதான் அந்த சிலை எங்கு வைப்பது என முடிவு செய்யப்படும் என வருவாய்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: