அமெரிக்காவில் பயில வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா ரத்து!: ஐ.சி.இ. அறிவிப்பு.. மாணவர்கள் கவலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகங்கள் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறி வருவதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் குறையாததால் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற அமெரிக்க பல்கலைக் கழகங்கள் தயாராகி வருகின்றன.

அமெரிக்காவின் பிரபல ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் வகுப்புகள் அனைத்தும் இனி ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ஆன்லைன் முறைக்கு மாறியிருக்கும் பல்கலைக் கழகங்களில் பயின்று வரும், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா ரத்து செய்யப்படுவதாக ஐ.சி.இ. எனப்படும் இம்மிகிரேஷன் கஸ்டம் என்போர்ஸ்மென்ட்  அமைப்பு அறிவித்துள்ளது. அதில் புலம்பெயர்ந்தோர் அல்லாத F-1 மற்றும் M-1 விசா வைத்துள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைனில் தான் நடைபெறுகின்றன.  

எனவே இந்த வகை விசாக்களை வைத்துள்ள மாணவர்கள் இனி நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்தகைய மாணவர்கள் அமெரிக்காவில் இருந்தால், அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் அல்லது ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் சேர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா, சவூதி அரேபியா, தென்கொரியா, கனடா நாடுகளை சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவில் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: