சென்னை ராயபுரம் காப்பகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 35 குழந்தைகளும் குணமாகிவிட்டனர்..: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

புதுடெல்லி: சென்னை ராயபுரம் காப்பகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 35 குழந்தைகள் குணமாகிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு காப்பகங்களில் தங்கியுள்ள சிறுவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதில், குறிப்பாக சென்னை ராயபுரம் அரசு சிறுவர் காப்பகத்தில் தங்கி இருந்தவர்களில் 35 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த காப்பகத்தின் வார்டனுக்கு முதலில் கொரோனா தொற்று இருந்ததாகவும், இதனை அவர் அலட்சியப்படுத்தியதால் தான் காப்பகத்தில் இருந்த 35 சிறுவர்களுக்கும் நோய் தொற்று பரவியதும் தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா நோய் தொற்று பரவியது எப்படி?, அங்கு குழந்தைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூன் 15ம் தேதியன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், காப்பகத்தின் வெளியில் இருந்து குழந்தைகளை பார்க்க பலர் வந்து சென்றதால் தான் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை கண்டறிந்த பிறகு அதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு நோயின் தாக்கத்தை பொறுத்து பல்வேறு மையங்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர காப்பகத்தில் சுகாதார பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது, என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  சென்னை ராயபுரம் காப்பகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 35 குழந்தைகள் குணமாகிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் புதிதாக கொரோனா தொற்று இல்லை என்றும் தமிழகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் எந்தவொரு குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. இந்நிலையில், இவ்வழக்ககில் பதிலளிக்காத உத்தரபிரதேசம், திருப்புரா போன்ற மாநிலங்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை  திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

Related Stories: