கொரோனா வைரஸ் தீவிர பரவல் எதிரொலி: வெளிநாட்டில் கல்வி பயில மாணவர்கள் தயக்கம்... விண்ணப்ப விகிதமும் சரிவு!!!

பிரிட்டன்:  கோவிட் -19 வைரஸ் அச்சம் எதிரொலியாக வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்கு இந்திய மாணவர்களிடம் ஆர்வம் குறைந்துவிட்டதால் பிரிட்டனில் 13 பல்கலைக் கழகங்கள் பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டுள்ளன. பிரிட்டனில் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில் படிப்பதற்கு வருடந்தோறும் செப்டம்பர் மாதத்தில் சேர்க்கை நடைபெறும். இதில் இந்தியாவில் இருந்து பெருமளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வது வாடிக்கை. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இந்த ஆண்டு பிரிட்டன் பல்கலைக் கழகங்களில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கும் விகிதம் 50 விழுக்காடு சரியும் என்று லண்டலின் உள்ள நிதி ஆய்வுகள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு உள்நாட்டு மாணவர்களை விட சர்வதேச மாணவர்களிடம் இருந்து மூன்று மடங்கு அதிக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் வெளிநாடு மாணவர்கள் வருகை தடைபட்டால் பிரிட்டனில் உள்ள 13 பல்கலைக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியை சந்திக்கும் என்றும், நிதி ஆய்வு  அமைப்பு எச்சரித்திருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்க வரவில்லை என்றால், பிரிட்டனில் உள்ள 13 பல்கலைக் கழகங்களுக்கு இந்திய மதிப்பீட்டில் 27 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 1 லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் கல்வி பயிலும் ஆர்வம் இந்திய மாணவர்களிடையே குறைந்துவிட்டதற்கு கொரோனா வைரஸின் அச்சம், நீண்டுவரும் ஊரடங்கின் காலம், தங்கும் இடங்களில் பாதுகாப்பின்மை போன்றவையே காரணம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: