×

திருமலை திருப்பதி கோயிலில் பாதுகாப்பு பணிக்கு ஒப்பந்தம் பெற்று தருவதாக ரூ.80 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராணுவத்தில் கர்னலாக பணியாற்றிய முன்னாள் ராணுவ அதிகாரி குமார் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தாம்பரத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை நடத்தி வருகிறேன். எனக்கு செந்தில் குமார் என்பவர் அறிமுகமானார். அவர் திருப்பதி தேவஸ்தானத்தில் 450 காவலாளி பணிக்கு ஆட்கள் தேவைபடுவதாகவும், அந்த வேலைக்கான ஒப்பந்தத்தை எனது நிறுவனத்திற்கு வாங்கி தருவதாக கூறினார். எனது செக்யூரிட்டி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை பெற்று தருவதாக கூறி அதற்கு வைப்பு தொகையாக பணம் செலுத்த வேண்டும் என கூறினர். அதைதொடர்ந்து ஆன்லைன் மூலம் முதலில் பணத்தை பரிமாற்றம் செய்தேன். பிறகு ரூ.50 லட்சம் பணத்தை ரொக்கமாக தரவேண்டும் என கூறினர். அதன்படி நான் ஓப்பந்த பத்திரம் எழுதி வாங்கி கொண்டு ரூ.50 லட்சம் பணம் கொடுத்தேன்.

அதற்கு பிறகு தாம்பரத்தில் உள்ள எனது நிறுவனத்திற்கு தேவஸ்தான போர்டில் இருந்து ஆடிட்டர்கள் வருவதை போல் வந்து, ஆவணங்களை எல்லாம் சரிபார்த்தனர். இதுபோல் பல முறை என்னிடம் மொத்தம் ரூ.80 லட்சம் பணத்தை வாங்கினர். ஆனால், பணம் வழங்கி 8 மாதங்கள் ஆகியும் உறுதி அளித்தபடி ஒப்பந்த பணியை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான போர்டில் விசாரித்தேன். அப்போது தனியார் செக்யூரிட்டி வேலைக்கு திருப்பதி கோயிலில் எந்த ஒரு ஆட்களையும் வேலைக்கு எடுக்கவில்லை என தெரிவித்தனர். பின்னர் என்னிடம் பணத்தை பெற்ற செந்தில்குமார் மற்றும் அவர் அறிமுகப்படுத்தியவரை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டதற்கு, அதை தராமல் எனக்கு மிரட்டல் விடுத்தனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.80 லட்சம் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரூ.80 லட்சம் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Commissioner ,Tirumala Tirupathi ,Defense officer , Thirumalai, Tirupathi temple, security work, contract, Rs 80 lakh fraud
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...