அதிமுக தலைமை அலுவலகத்தில் ஐவர் குழு திடீர் ஆலோசனை

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஐவர் குழுவினர் நேற்று இரவு திடீரனெ ஆலோசனை நடத்தினர். சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கட்சி பணிகள் சம்பந்தமான அனைத்து ஆலோசனைகளும் நடத்துவது வழக்கம். மேலும் கட்சி சம்பந்தமாக அலுவலகத்திற்கு வரும் புகார்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மீது வரும் புகார்களை விசாரிப்பதற்காக கட்சி தலைமை சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐவர் குழு நிர்வாகிகள் நேற்று இரவு திடீரென கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். மேலும் விரைவில் தேர்தல் வருவதையடுத்து கட்சியில் சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை மாற்றுவது குறித்தும், கட்சி புகார் சம்பந்தமாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வருமான எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர். இதையடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் கட்சி தலைமை அலுவலகத்தில் திடீரென ஐவர் குழு ஆலோசனை நடத்தியது மாவட்ட செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் மத்தியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: