×

50 சதவீத ஊழியர்களுடன் வங்கிகள் செயல்பட தொடங்கின

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று முதல் வங்கிகள் வழக்கமான நேரத்தில் செயல்பட தொடங்கின. தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 6வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஜூன் 19ம் தேதி முதல் நேற்று வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வங்கிகள் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இந்த 4 மாவட்டங்களில் வங்கி கிளை அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்பட்டது. அதுவும், பெட்ரோல் பங்க் மற்றும் காஸ் சிலிண்டர் விநியோகம் உள்ளிட்டவைகளில் தினசரி வசூலாகும் பணத்தை கட்டுவதற்கான பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம்களில் பணம் நிரப்புவது உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டுமே நடந்தது. பொதுமக்களுக்கு நேரடி வங்கி சேவைகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, வங்கிகள் நேற்று காலை முதல் வழக்கம் போல செயல்படத் தொடங்கின. 50 சதவீத ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை என வழக்கமான நேரத்தில் வங்கிகள் செயல்பட தொடங்கின. இதையடுத்து பொதுமக்களும் பணபரிவர்த்தனை மேற்கொள்ள வங்கிகளுக்கு திரண்டனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், ‘மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 12ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், அந்தப் பகுதிகளில் வங்கிகள் காலை 10 மணி முதல் 2 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே செயல்படும். பொதுமக்களுக்கு வங்கி சேவை பணிகள் வழங்கப்பட மாட்டாது’ என்றனர்.

Tags : Banks , Fifty percent of employees, banks, started
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்