×

கல்வித்துறையின் குழப்ப அறிக்கைகளால் மாணவர்கள், பெற்றோர் மனஉளைச்சல்: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
பள்ளிக்கு நீண்ட நாள் வராதவர்கள், பாதியில் நின்று மாற்று சான்றிதழ் பெற்றவர்கள், மரணமடைந்தவர்கள் உள்ளிட்டோரை கணக்கிட்டு அவர்களின் விவரங்களை தனியாக சேகரிக்க வேண்டும். இந்த மாணவர்களின் விவரங்கள் எந்த காரணத்திற்காகவும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றுவிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்து போன மாணவர்கள் தேர்ச்சி பட்டியலில் இடம் பெறக் கூடாது என்று கூறுவது வியப்பாக உள்ளது. உடல்நலக் குறைவு, குடும்ப பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்கள் இருப்பது இயல்பு. அதனைக் காரணம் காட்டி அவர் தேர்ச்சிக்குரியவர் அல்ல என்று கூறுவது பொறுத்தமற்ற காரணம் ஆகும். காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வது எதார்த்தத்திற்கு புறம்பானது.

ஒரு மாணவர் காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று இருக்கலாம். அதே மாணவர் முழுஆண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கவும் வாய்ப்புண்டு. அதே போன்று காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர் முழு ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும்.ஆதலால், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேடு இவைகளை எல்லாம் கணக்கில் கொள்ளாது. இவ்வாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து குழப்பங்களை போக்கிட வேண்டும். கல்வித்துறையில் குழப்பங்கள் தொடர்ச்சியாக நீடித்து வருவது பல்வேறு ஐயப்பாடுகளை ஏற்படுத்துகின்றது.உண்மையில் கல்வித்துறையை இயக்குவது யார் என்கிற கேள்வி எழுகின்றது. இத்தகைய கேள்விகளுக்கு இடம் அளிக்காது, தெளிவான முடிவுகள் மேற்கொண்டு, உறுதியாக நிறைவேற்றிட வேண்டும்.இவ்வாறு முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Student ,Mutharasan , Department of Education, Confusion Report, Students, Parents, Stress, Mutharasan
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...