காய்கறி வாகனத்தில் எடுத்து சென்ற ரூ.1.5 லட்சம் மதிப்பு மதுபானம் பறிமுதல்: 4 பேர் கைது

பூந்தமல்லி: கொரோனா காரணமாக சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சிலர் மதுபாட்டில்கள் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, நசரத்பேட்டை - திருமழிசை கூட்டு சாலையில் பூந்தமல்லி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு மதுபானங்களை எடுத்து வரும் வாகனங்களை மடக்கி பிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் நசரத்பேட்டை கூட்டு சாலையில் காலி தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில், 20 பெட்டிகளில் மதுபானங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் இருந்த 4 பேரையும் கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பூந்தமல்லி, முத்துக்குமரன் நகரை சேர்ந்த விஜயகுமார் (30), பூந்தமல்லி, மேல்மா நகரை சேர்ந்த சரன் (28), ஞானம் (30), நரேஷ் (33) ஆகிய நான்கு பேர், பூந்தமல்லியில் உள்ள காய்கறி உரிமையாளரின் வாகனத்தை எடுத்துக்கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதுபான கடையில் 20 பெட்டி மதுபானங்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.  பறிமுதல் செய்யப்பட்ட மதுபானத்தின் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: