×

மருத்துவமனை 5வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை

திருக்கழுக்குன்றம்: தனியார் மருத்துவமனை 5வது மாடியில் இருந்து குதித்து, கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார். கேளம்பாக்கம் அடுத்த செம்மஞ்சேரியை சேர்ந்த 36 வயது வாலிபருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதித்தது. இதையடுத்து அவர், மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைதொடர்ந்து அவரை, நேற்று கேளம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில், வாலிபரின் மனைவி, 2 குழந்தைகள், அவரது தாய், தந்தை என அனைவரையும் பரிசோதனை செய்தபோது, அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்தபட்டனர்.

இந்நிலையில், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், வாலிபர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி நேற்று மாலை வாலிபர், அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் 5வது மாடிக்கு சென்றார். திடீரென அங்கிருந்து  கீழே குதித்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். புகாரின்படி கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி, மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த ஒருவர், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கிறார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை பாதித்தது. இதையடுத்து அவர், மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், நேற்று அவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனே அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல், திருக்கழுக்குன்றம் மங்கலம் பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக டிரைவர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. மேலும், கல்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கும், கல்பாக்கம் அரசு போக்குவரத்து பணிமனை உதவி பொறியாளரான திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

* செவிலியருக்கு தொற்று உறுதி
செய்யூர் வட்டம் பவுஞ்சூரில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதில் கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண், செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்த செவிலியருக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை, பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைதொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் பணிபுரிந்து வந்த ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் சுற்றிலும், சுகாதாரத்துறை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். இதுவரையில், லத்தூர் ஒன்றியத்தில்  20 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. தற்போது, மருத்துவமனை செவிலியருக்கு தொற்று உறுதியானதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

Tags : patient ,floor ,Corona ,suicide ,hospital , Hospital, 5th Floor, Jumping, Corona Patient, Suicide
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...