திருவனந்தபுரத்தில் மும்மடங்கு ஊரடங்கு கேரள தலைமை செயலகத்துக்கு பூட்டு: முதல்வர், அமைச்சர்கள் ஒர்க் அட் ஹோம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாளாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் நோயின் தீவிரம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் திருவனந்தபுரம் நகரில் மட்டும் 27 பேருக்கு நோய் தொற்றியுள்ளது. நோய் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நேற்று (6ம் தேதி) காலை 6 மணி முதல் ஒருவாரத்திற்கு திருவனந்தபுரம் மாநகர பகுதியில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவை இல்லாமல் நகர் பகுதிக்குள் வரவோ, வெளியே செல்லவோ யாருக்கும் அனுமதியில்லை. இந்த வாரம் முழுவதும் கேரள தலைமை செயலகம் மூடப்பட்டுள்ளது.

முதல்வர் பினராய் விஜயன் அலுவலகம் அவரது அரசு இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்துதான் அவர் பணிகளை செய்து வருகிறார். அமைச்சர்களும் தங்கள் வீடுகளில் இருந்து பணிகளை மேற்கொள்வர். வெளிமாவட்டங்களில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளன. மருத்துவம் உட்பட அத்தியாவசிய தேவை கருதி ஒரேயொரு சாலை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. பஸ் உட்பட பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் நடத்தப்பட இருந்த கேரள பல்கலை தேர்வுகள் மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு மட்டும் சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: