×

வேகம் குறையாத கொரோனா பாதிப்பு 7 லட்சம் தாண்டியது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. இதில், தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 24,248 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 425 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 19,693 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், உலகளாவிய அதிக பலியை சந்தித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆனாலும், இதுவரை 4 லட்சத்து 24,432 பேர் குணமடைந்துள்ளனர் என்பது ஆறுதலான விஷயமாக உள்ளது. 2,53,287 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோர் விகிதம் 60.85 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே நேற்று மாலை கணக்கெடுப்பின்படி, இந்தியா 7 லட்சம் எண்ணிக்கையை தாண்டியது. மொத்த பாதிப்பு 7 லட்சத்து 1,240 ஆக அதிகரித்தது.

* ஜனவரியில் இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவிய நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்ட 110 நாள் ஆனது
* ஜூன் 3ம்தேதி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சம் ஆனது. அடுத்த 10 நாளில் 3 லட்சமாக அது அதிகரித்தது.
* ஜூன் 21ல் 4 லட்சம், ஜூன் 27ல் 5 லட்சம் ஜூலை 2ல் 6 லட்சம். அடுத்த நான்கு நாளில் 7 லட்சமாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

* 1 கோடி பேருக்கு பரிசோதனை
இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தொட்டுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஊடக ஒருங்கிணைப்பாளர் லோகேஷ் சர்மா கூறுகையில், ‘‘கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்பத்தில் புனேவில் தேசிய வைராலஜி ஆய்வகம் ஒன்றில் மட்டுமே பரிசோதனைகள் செய்யப்பட்டன. தேசிய ஊரடங்கு தொடங்கும்முன் ஆய்வகங்களின் எண்ணிக்கை 100 ஆகவும், ஜூன் 23ல் 1000 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. தற்போது 1,105 ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணி கணக்கெடுப்பின்படி, இதுவரை 1 கோடியே 4,101 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களில் மட்டும் ஒருநாளைக்கு சராசரியாக 2 லட்சம் பேருக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Coronal impact, not slowing, exceeded 7 lakhs
× RELATED நீதிமன்ற அவமதிப்பு வழக்கி யோகா...