200க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு கொரோனா வைரஸ் காற்றில் பரவும்: உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘கொரோனா பாதித்த நபர் தும்மும் போதும் இருமும் போதும் கண்ணுக்கு அகப்படாத அவரது எச்சில் நுண்துகள்கள் மூலமாக வைரஸ் பரவி மற்றவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடும்’ என 200க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். இதனால் கொரோனா காற்றில் பரவும் என அறிவிக்கவும் அவர்கள் உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தி உள்ளனர். கொரோனா பாதித்த நபர்கள் தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் கொரோனா நோய் பரவும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு விட்டு முகத்தை தொடும்போதும் கொரோனா பரவும் எனவும் உலக சுகாதார அமைப்பு முன்பு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், கொரோனா காற்றில் பரவும் என்பதை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்து 32 நாடுகளைச் சேர்ந்த 239 ஆய்வாளர்கள் உலக சுகாதார அமைப்பிற்கு திறந்த மடல் எழுதி உள்ளனர்.

அதில் ஆய்வாளர்கள் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் மிகநுண்ணிய எச்சில் துகள்கள் மூலமாக காற்றில் பரவும் தன்மை கொண்டது. இது இந்த வைரஸ் பரவுவதற்கான முக்கிய காரணமாகும். குறிப்பாக, காற்றோட்டம் குறைவான இடங்களில் அதிகளவில் மக்கள் கூடும் போது, எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தாலும் மாஸ்க் அணிதல் அவசியம். வீட்டிற்குள்ளும் மாஸ்க் அணிந்திருத்தல் வேண்டும். மருத்துவ பணியாளர்கள் என்95 முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். பள்ளிகள், நர்சிங் ஹோம்கள், வீடுகள், அலுவலகங்களில் ஏசி உபயோகிப்பதை முடிந்தளவுக்கு தவிர்க்க வேண்டும். அதோடு திறன்மிகு காற்று சுத்திகரிப்பான் பயன்படுத்த வேண்டும். புறஊதா கதிர்கள் பயன்படுத்துவதன் மூலம் அறைகளுக்குள் பரவும் வைரஸ் துகள்களை அழிக்க வேண்டும். எனவே, கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடிய நோயாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

1அதிக கூட்டமுள்ள இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அங்கு காற்று மூலம் வைரஸ் எளிதில் பரவும்.

2முகம், மூக்கு, வாயை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

3 சமூக இடைவெளியுடன் மாஸ்க் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

4 காற்றோட்டமுள்ள அறைகளில் வைரஸ் நுண்துகள் எளிதில் வெளியேறும்.

5 இருமும் போதும், தும்மும் போதும் நேரடியாக செய்யக் கூடாது. கர்சீப்பால் வாயை மூடி இரும, தும்ம வேண்டும்.

6 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவ பணியாளர் கட்டாயம் என்95 மாஸ்க் அணிய வேண்டும்.

* வாந்தியும் அறிகுறி

காய்ச்சல், சளி, வறட்டு இருமல் ஆகியவை கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இதோடு திடீரென வாசனை இழத்தல், சுவை இழத்தல் ஆகியவையும் ஏற்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தசை வலி ஆகியவையும் கொரோனாவின் புதிய அறிகுறிகளாக கூறப்படுகின்றன. தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக கவனிக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: