கொரோனா, ஜிஎஸ்டி தோல்விகள் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலின் எதிர்கால ஆய்வாக இருக்கும்: மத்திய அரசு மீது ராகுல் தாக்குதல்

புதுடெல்லி: ‘கொரோனா வைரஸ், ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்கள் எதிர்காலத்தில் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலின் ஆய்வாக இருக்கும்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், “எதிர்காலத்தில் கொரோனா தொற்று, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமல்படுத்துவது உள்ளிட்டவற்றிலான தோல்வியானது ஹார்வர்டு வர்த்தக பள்ளியின் ஆய்வாக இருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா நோய் தொற்றின்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி மகாபாரத போர் 18 நாட்கள் நடந்தது. கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு 21 நாட்கள் ஆகும் என்று கூறியிருந்த வீடியோ காட்சியையும் ராகுல் இணைத்துள்ளார்.

இந்நிலையில் பாஜ தலைவர் ஜேபி நட்டா ராகுல்காந்தியை கடுமையாக சாடி கருத்து தெரிவித்துள்ளார். நட்டா தனது டிவிட்டர் பதிவில், “ராகுல்காந்தி  நாடாளுமன்ற பாதுகாப்பு நிலைக்குழுவின் ஒரு கூட்டத்தில் கூட பங்கேற்றது கிடையாது. ஆனால் நாட்டை இழிவுபடுத்தி பேசுகிறார், நமது ஆயுத படை வீரர்களின் வீரம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி எழுப்புவது வருத்தமளிக்கிறது. பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் ராகுல் செய்கிறார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: