×

இந்தியாவின் சர்வதேச, உள்நாட்டு அழுத்தத்துக்கு பணிந்தது கல்வானிலிருந்து சீன ராணுவம் வெளியேறுகிறது: முகாம்கள், கட்டமைப்புகளை அகற்றி வாகனங்களில் ஏற்றி செல்கிறது

புதுடெல்லி:  கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை கொன்ற சீனாவுக்கு சர்வதேச அளவிலும், உள்நாட்டு அளவிலும் இந்தியா கொடுத்த அழுத்தம் மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கல்வான் பள்ளத்தாக்கிலும் காக்ராவிலும் ஆக்கிரமிப்பு செய்திருந்த இடங்களில் இருந்து சீன படைகள் வெளியேறி வருகின்றன. அங்கு அமைக்கப்பட்டு இருந்த முகாம்கள், கட்டமைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15ம் தேதி இந்திய, சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில். 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 43 சீன வீரர்கள் இறந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இருநாட்டின் எல்லை பகுதிகளிலும், இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை குவித்து வருகின்றன. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு மனப்பான்மைக்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன, இந்தியாவுக்கு பக்கபலமாக நின்று வருகின்றன. மேலும், இந்தியாவிலும் சீனாவுக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுந்துள்ளனர். சீனாவின் பொருட்களை புறக்கணிக்கின்றனர். மத்திய அரசும் அதிரடியாக, சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட 59 செல்போன் ஆப்களுக்கு தடை விதித்தது. மேலும், அந்நாட்டு நிறுவனங்களுடன் செய்யப்பட்ட பல லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்து வருகிறது. இதனால், சீனா ஆட்டம் கண்டுள்ளது.

இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன் லே பகுதிக்கு சென்று லடாக் தா க்குதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி, `எல்லையை அத்துமீறி விரிவுபடுத்தும் போக்கிற்கு முடிவு கட்டப்பட்டு விட்டது.’ என்று மறைமுகமாக சீனாவை எச்சரித்தார். பின்னர், எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து அவர் ஆய்வு செய்தார். இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் லீ இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அப்போது, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இருநாடுகளும் உடனடியாக தங்கள் படைகளை திரும்ப பெற்று கொள்ள சம்மதம் தெரிவித்து கொண்டனர்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,  ‘இந்தியா-சீனா எல்லை பிரச்னை தொடர்பாக இரு நாடுகளின் தரப்பிலும் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இரு தரப்பிலும் அமைதியை மீண்டும் நிலைநாட்ட, இந்திய, சீன எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து விரைந்து வெளியேற ஒப்புக் கொண்டுள்ளன. இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் இருந்து இரு தரப்பினரும் ஒவ்வொரு கட்டமாக, படிப்படியாக படைகளை திரும்ப பெறுவது என்பதை உறுதி செய்து ஒப்புக் கொண்டுள்ளன.’ என கூறப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றாற்போல், கல்வான் பள்ளத்தாக்கில் இருந்தும், காக்ரா பகுதியில் இருந்தும்  சீனா ராணுவம் வாபஸ் பெற்று வருகிறது., அங்கு அமைக்கப்பட்டு இருந்த தனது முகாம்கள், கட்டமைப்புகளை அது அகற்றி, ராணுவ வாகனங்களில் ஏற்றிச் செல்கிறது. இதுவரை அது, கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து ஒரு கிமீ  வெளியே சென்றுள்ளது. அது, எவ்வளவு தூரம் பின்னோக்கி செல்ல உள்ளது என்பதை இந்திய ராணுவம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அதே நேரம், பாங்காங் டிசோ பகுதியிலும் சீன ராணுவம், அங்குள்ள ஏரி்யிலும் கூட சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்து முகாமிட்டுள்ளது. அங்கிருந்து அது வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. சீன படைகள் வெளியேறுவதை இந்திய ராணுவம்  உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

* எத்தனை கி.மீ. தூரம்?
கல்வான் பள்ளத்தாக்கில் 2 கிமீ., தூரமும் பாங்காங் டிசோ ஏரி பகுதியில் 8 முதல் 9 கிமீ தூரமும்  சீன ராணுவம் ஊடுருவியதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, இப்பகுதியில் இருந்து  சீனப் படைகள் ஒரு  கி.மீ.  தூரம் பின்வாங்கி சென்றுள்ளது.

Tags : military ,Chinese ,India ,unloading camps ,Calvary ,camps ,China ,Kalvan , India's international and domestic tension, the Chinese military, bases, structures
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின் போது 2...