×

கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை நெருங்கிவிட்டது: கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டது என்று கேரள அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், கேரளாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதா? என்று நம்மால் சொல்ல முடியாது. ஆனால் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு இல்லாதவர்கள் மற்றும் பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் தற்போது அதிகளவில் தொற்று ஏற்படுகிறது. தினமும் 200 பேருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. இதனால் நாம் சமூகப் பரவல் என்னும் நிலையை நெருங்கிவிட்டோம்.

நாடு முழுவதும் அமலில் இருந்த முழு பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தவுடன், வெளிநாடுகளில் இருந்து 4.1 லட்சம் கேரள மக்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இதேபோல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோரும் கேரளாவிற்கு திரும்பியுள்ளனர். இவர்களில் இதுவரை ஐந்தாயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் உள்ளூர் பரவலையும், இறப்பு விகிதத்தையும் கேரளா குறைத்துள்ளது. ஆனால், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து நிறைய மக்கள் கேரளாவிற்கு வந்தால் புதிய சிக்கல்கள் உருவாக கூடும். மேலும் கேரளாவை பொறுத்தவரை, கொரோனா நோயாளிகளில் 50 சதவீதத்தினருக்கு எவ்வித அறிகுறியும் காணப்படுவதில்லை. இது மிகவும் சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது என இந்திய மருத்துவ கழகத்தின் கேரள மாநில பிரிவின் துணைத் தலைவரான மருத்துவர் சுல்பியும் எச்சரித்துள்ளார்.

இதனால், கொரோனா வைரஸ் பரவல் வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும் என்று நம்மால் உறுதிபட கூற முடியாது. இதனால், அவசர சட்டத்தை அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்துள்ளோம். கேரளா ஒவ்வொரு முறையும் தேவைக்கு அதிகமாகவே பிரச்சனையின் வீரியத்தை எடுத்துக்கொள்கிறது. அப்போது தான் கொரோனா போன்ற கொடிய தொற்றை எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.



Tags : Kerala ,Health Minister ,Corona , Corona, Social Distribution, Kerala
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...