கொரோனாவால் சென்னை காவல்துறையில் 3-வது மரணம்...!! உயிரிழந்த ஆயுதப்படை காவலருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கல்..!!

சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்த ஆயுதப்படை காவலருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டதாவது: சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலர் திரு.நாகராஜன் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திருமதி.பா.வளர்மதி அவர்கள் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் அவர்களும் விரைவில் பூரண நலம்பெற்று இயல்புநிலை திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று ட்விட்டரில் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆயுதப்படை காவலர் நாகராஜன் (32). இவர் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி  வந்தார். சென்னை பாரிமுனையில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி  மாநகராட்சி அலுவலகத்தில் நாகராஜன் கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்  கடந்த 4-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை நாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார்.

ஏற்கெனவே சென்னை காவல்துறையில் மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் 3-வது காவலர் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆயுதப்படை பிரிவில் முதல் உயிரிழப்பு என்பது இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: