×

சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!!

சென்னை : சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தடைவிதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், அத்தடை தற்காலிகமானதாகவும், அவ்வுத்தரவு வாய்மொழியாகவும் இருப்பது பல்வேறு ஐயங்களுக்கு வித்திடுகிறது.

தமிழகக் காவல்துறையினரின் உதவிகளுக்குக் கூடுதலான ஆட்கள் தேவைப்படுகிறார்களென்றால், அதற்குக் கூடுதல் காவலர்களை நியமிக்கச்செய்வது அல்லது ஊர்க்காவல் படையினரை உதவிக்குப் பயன்படுத்திக் கொள்ளச் செய்வது போன்றவற்றையே அரசு வழிகாட்ட வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக, ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் ஒரு உட்பிரிவைக் காவல்துறையே உருவாக்கி, அவர்களுக்குக் காவலர்களுக்கு இணையான அதிகாரங்களை வழங்கி, வரம்பு மீறவும், அத்துமீறவும், சிறுவணிகர்களிடம் பணம் பறிக்கவும், காவல்நிலையத்தில் சிறைப்படுத்தப்படுபவர்களைத் தாக்கவும்கூட பயன்படுத்தி வருகிற செய்தி பேரதிர்ச்சி தருகிறது. அதிலும் ‘சேவா பாரதி’ எனும் மதவாத அமைப்பினரை ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ பிரிவாக வைத்துச் செயல்பட்டிருப்பது வெளிப்படையாக நிகழ்ந்தேறிய சட்டவிரோதமாகும். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டு இயங்கும் பன்மைத்துவம் மிகுந்த சனநாயக நாட்டின் நிர்வாகப்பிரிவில் ஒரு மதவாத அமைப்பை ஊடுருவ வழிவகை செய்திருப்பது மிகப்பெரிய நிர்வாகச்சீர்கேடாகும்.

‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் இவர்களுக்கும், மக்களுக்குமான தொடர்பென்ன? இப்பிரிவினருக்கான அதிகார வரம்பென்ன? அவர்களின் வேலைத்திட்டங்கள் என்னென்ன? அவர்களுக்கான சீருடை என்ன? அவர்களுக்குரிய பணிநேரம் எவ்வளவு? அவர்களுக்கான ஊதியம் என்ன? அது எதனை வைத்து வழங்கப்படுகிறது? அதற்கான நிதியாதாரமென்ன? இப்பிரிவைக் காவல்துறையினரே உருவாக்கி நிர்வகித்துக்கொள்ள சட்டத்தில் இடமுண்டா? எனும் எக்கேள்விக்கும் இதுவரை விடையில்லை. ஆனால், தமிழகம் முழுமைக்கும் இப்பிரிவு காவல்துறையினரின் துணைப்பிரிவு போல அதிகாரப்பூர்வமற்று, அரசின் அனுமதியோடே இயங்கியிருப்பது மக்கள் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் கொடுஞ்செயலாகும். சட்டத்திற்குப் புறம்பாக இவ்வாறு ஒரு பிரிவை காவல்துறையினரே உருவாக்கி, அவர்கள் அத்துமீறலில் ஈடுபட வழிவகை செய்திருப்பது மிகப்பெரும் சட்டவிரோதமாகும். சாத்தான்குளம் வணிகர்களின் படுகொலைக்குப் பிறகு, ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் அப்பிரிவுக்கெதிராகக் கண்டனக்குரல்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கு ஒரு சில மாவட்டங்களில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருப்பதும், அதற்கான உத்தரவையும் வாய்மொழியாகவே அறிவித்திருப்பதும் மக்களின் கோபஅலையைத் தணிப்பதற்கான ஒரு யுக்திதானே ஒழிய, அது தீர்வுக்கான வழியல்ல! இவ்வளவு கொதிநிலையிலும் சென்னையில் அப்பிரிவுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதன் மூலம் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே, காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கிற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுமைக்கும் ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் சட்டவிரோதப் பிரிவை மொத்தமாகக் கலைக்க உத்தரவிட்டு, அதனைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும், காவல்துறையினரின் உதவிகளுக்கு ஊர்க்காவல்படையினரைப் பயன்படுத்தவும், கூடுதலான காவலர்களை பணிக்கு நியமிக்கவுமான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : government ,Tamil Nadu ,Friends of Police ,Seaman ,friends , Law, Friends of Police, Government of Tamil Nadu, Seaman, Emphasis
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...