×

மும்பை மாநகரில் நீடிக்கும் கனமழை...வெள்ளத்தால் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு..!!

மும்பை: மும்பை மாநகரில் கனமழை நீடிப்பதால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மும்பையில் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை நீடித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த இரு தினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க போலீசார் எச்சரித்து இருந்தனர். இந்நிலையில், மும்பையில் அதிகாலை முதலே பலத்த மழை பெய்தது. விடாமல் பெய்த மழையால் மும்பையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இந்த பருவமழை தாக்கத்தில் குறிப்பாக தானே, ராய்காட் போன்ற கடலோர மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்து வருகிறது. இங்கு சாலை ஒன்று திடீரென உள்வாங்கியதால் பதற்றம் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. நவி மும்பை, தாராவி, பாந்த்ரா, கல்யாண், செம்பூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. ஏற்கெனவே கொரோனாவின் பிடியில் சிக்கி இருக்கும் மும்பை மக்களுக்கு கனமழை மேலும் தலைவலியை கொடுத்துள்ளது. இதனிடையே அடுத்தடுத்த நாட்களில் மழை குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Mumbai , Heavy rains in Mumbai
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...