×

சரிவில் இருந்து படிப்படியாக மீண்டது: மூன்று மாதத்தில் 4.5 கோடி வருவாய் ஈட்டிய பாண்லே

வில்லியனூர்: புதுச்சேரி குருமாம்பேட்டில் 1966ல் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனம் துவங்கி, கடந்த 53 ஆண்டுகளாக பாண்லே என்ற பெயரில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பாண்லேவுக்கு புதுச்சேரியில் இருந்து 55 ஆயிரம் லிட்டரும், தமிழகம் மற்றும் பெங்களூரு பகுதிகளில் இருந்து 50 ஆயிரம் லிட்டரும் என நாள் ஒன்றுக்கு 1.05 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ெசய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் பால் தரமானதா? என கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் சோதனைக்கு பிறகே அனுப்பப்படுகிறது. இதனால் பாண்லே நிறுவனத்துக்கு தரமான பால் கிடைக்கிறது.

பாலை 3 விதங்களில் பதப்படுத்தி நீலம், பச்சை, ஆரஞ்ச் பாக்கெட்டுகளில் 500 மிலி பாலும், 3:5 விகிதத்தில் சமன்படுத்திய பாலை 200 மிலி பாக்கெட்டுகளிலும் நிரப்பி விற்பனைக்கு அனுப்புகின்றனர். இங்கிருந்து தான் அன்றாடம் அரசு பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவமனைகள், பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது.  இதுமட்டுமின்றி பாண்லேவில் பாலில் இருந்து ஐஸ்கிரீம், நெய், குல்பி, பாதாம் பால், சாக்லெட், பால்கோவா, தயிர் உள்ளிட்டவையும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை நகரம் மற்றும் கிராம பகுதிகளில் 70 பாண்லே கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ேமலும் நெய், ஐஸ்கிரீம், பால்கோவா உள்ளிட்டவை 50 ஏஜெண்டுகள் மூலமும் விற்கப்படுகிறது. புதுச்சேரி மட்டுமின்றி விழுப்புரம், கடலூர், நெய்வேலி, திண்டிவனம் உள்ளிட்ட தமிழக பகுதிகளிலும் பாண்லே கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தனியார் நிறுவனத்திற்கு ஐஸ்கிரீம் தயாரித்து கொடுப்பதன் மூலம் பக்கத்து மாவட்டங்களில் பாண்லே நிறுவனம் கால்பதித்துள்ளது. இதுபோன்ற விற்பனைகள் மூலம் பாண்லே நிறுவனத்துக்கு சுமார் ரூ.55 லட்சம் வரை தினமும் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், முன்னாள் மேலாண் இயக்குநர், பாண்ேல நிறுவனத்திற்கு வராமல் நிர்வாகத்தை கவனிக்காததால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டது. இதனால் விற்பனை குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு, நிறுவனம் பாதாளத்துக்கு சென்றது. மேலும் புதுச்ேசரியில் பால் பற்றாக்குறையும் ஏற்பட்டது.

இதனால் புதிதாக மேலாண் இயக்குநரை நியமிக்கக்கோரி ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் கடந்த மார்ச் மாதம் சப்-கலெக்டர் சுதாகருக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து பாண்லேவுக்கு புதிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று 3 மாதங்களில் நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்து வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்படும் பாலின் விலையை ரூ.42ல் இருந்து ரூ.30க்கு கொள்முதல் செய்து லிட்டருக்கு ரூ.12 லாபம் ஈட்டினார். இதன் மூலம் 3 மாதத்தில் 1.5 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. பால் பவுடர், வெண்ணை, ஐஸ்கிரீம் மூலம் ரூ.3 கோடி லாபம் ஈட்டியுள்ளார்.

சேதராப்பட்டில் பால் கொள்முதல் சென்டர்
புதுச்சேரி ஒட்டிய தமிழக பகுதிகளில் இருந்து பால் கொள்முதல் செய்ய சேதராப்பட்டு பகுதியில் பால் கொள்முதல் சென்டர் திறக்கப்படவுள்ளது. இதன் மூலம் சேதராப்பட்டு அருகே உள்ள வானூர், கூட்ரோடு, இரும்பை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி புதிதாக தமிழக பகுதிகளான திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் விநியோகஸ்தர்களை நியமித்து பால் பொருள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மேலும் விற்பனை அதிகரித்து வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Panley, Puducherry, Co-operative Milk Production Company
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி