×

சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய வழக்கு: 6 போலீசார் மீது வழக்கு பதிய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய வழக்கில், 6 போலீசார் மீது வழக்கு பதிய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சங்கரன்கோவில் மலையான்குளத்தைச் சேர்ந்த தங்கதுரை(27), உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், சங்கரன்கோவில் டவுன் காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன், காவலர்கள் டேவிட்ராஜ், செந்தில்குமார், மகேஷ்குமார் ஆகியோர் 22.9.2019-ல் மோட்டார் சைக்கிளில் சென்ற என்னை ஆவணங்களைக் கேட்டுத் தாக்கினர்.

காவல்நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் சத்தியபிரபா, உதவி ஆய்வாளர் அன்னலெட்சுமி ஆகியோர் தாக்கினர். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் சத்தியபிரபா உட்பட 6 போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய சங்கரன்கோவில் நீதித்துறை நடுவர் 24.1.2020ல் உத்தரவிட்டார். இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. சங்கரன்கோவில் காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யவும், அந்த வழக்கை டிஎஸ்பி விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும், என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கனது இன்று நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிடுகையில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது அதே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் புகாரைப் பதிவு செய்ய மறுக்கின்றனர் என்று தெரிவித்தனர். இதனையடுத்து, மனுதாரரின் புகார் தொடர்பாக வேறொரு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி நேரடியாக விசாரிக்க, தென்காசி எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சங்கரன்கோவில் காவல்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : High Court ,Madurai ,branch ,policemen ,Sankarankoil , Sankarankoil, Thangadurai, Police, Case, High Court Madurai Branch
× RELATED மதுக்கடைகள் திறந்ததில் பொதுநலன்...