×

கொரோனாவால் முடங்கிய குமரி: காற்று வாங்கும் சுற்றுலா தலங்கள்: விழி பிதுங்கும் வியாபாரிகள்

நாகர்கோவில்: கொரோனா வைரஸ் தொற்று மக்களை உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் முடக்கி போட்டுள்ளது. இயற்கை அழகை ரசிக்கவும், உற்சாக பயணமாகவும், இயந்திரமயமான வாழ்க்கை முறைகளில் இருந்து இளைப்பாறும் விதமாகவும் மக்கள் சுற்றுலாவை தேர்வு செய்வது வாடிக்கை. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் சுற்றுலா துறையையும் புரட்டிபோட்டுவிட்டது. கன்னியாகுமரி கடலோர, மலையோர சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள மாவட்டம். அவை அத்தனையும் காற்று வாங்க தொடங்கி மாதங்கள் 4 ஆகியுள்ளது. இதனை நம்பி தொழில் செய்து வருகின்றவர்கள் லட்சத்திற்கும் மேல் உள்ளனர். சாலையோரங்களில் நாவல்பழம் விற்பனை செய்பவர்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் நடத்துகின்றவர்கள் வரை கொரோனாவின் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல், மே மாதங்களிலும், விடுமுறை நாட்களிலும் ஜே... ஜே... என மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் சுற்றுலா தலங்கள் கொரோனா ஊரடங்கு தொடங்கும் முன்னரே கடந்த மார்ச் மாதம் முதல் வெறிச்சோட தொடங்கின. ஏப்ரல், மே,ஜூன் மாதங்கள் கடந்து ஜூலை மாதம் ஆகிய பின்னரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சம், ஊரடங்கு உத்தரவால் தொடர்ந்து முடங்கியுள்ளன. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், குமரி மாவட்டத்திலும் மக்கள் அச்சத்தில் இருந்து இன்னும் விடுபடவில்லை.

பஸ், ரயில், விமான சேவைகள் முடக்கம், சுற்றுலா தலங்களை திறக்க அனுமதியில்லை, ஆன்மிக தலங்களுக்கு அனுமதியில்லை என்பது போன்ற பிரச்னைகளால் சுற்றுலா சார்ந்த தொழிலை நம்பியுள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முழுவதுமாக இழந்து தவித்து வருகின்றனர்.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், பொழுபோக்கு பூங்கா, காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியம், சூழியல் பூங்கா, வட்டக்கோட்டை, தொடர்ந்து பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி, சொத்தவிளை, சங்குத்துறை, முட்டம் கடற்கரை சுற்றுலா தலங்கள், உதயகிரிகோட்டை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைக்கட்டுகள், கீரிப்பாறை, காளிகேசம் என சுற்றுலா தலங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இவற்றில் பெரும்பாலும் எல்லா சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் காற்றுவாங்க கூட மக்கள் செல்வது இல்லை, அவ்வாறு செல்கின்றவர்களும் போலீசாரால் விரட்டியடிக்கப்படுகின்றனர். கன்னியாகுமரியில் கடலில் சுற்றுலா பயணிகளுக்காக மூன்று படகுகள் இயக்கப்படுகிறது. வெள்ளோட்டத்தில் விடப்பட்ட புதிய படகும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. படகுகள் இயக்கம் முடங்கியுள்ளது. கன்னியாகுமரியில் 400க்கும் மேற்பட்ட கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டு காட்சியளிக்கிறது. கைவினை பொருட்கள், பேன்சி பொருட்கள், சிற்றுண்டி ஸ்தாபனங்கள், உணவகங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளை நம்பியே இயங்குபவை ஆகும். தற்போது இவை அனைத்தும் மூடி காணப்படுவதால் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகமும், அதனை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரமும் முடங்கியுள்ளது.

சுற்றுலா பயணிகள் வந்தால் மட்டுமே வியாபாரம் நடைபெறும். சுற்றுலா பயணிகள் வராமல் பணிகளை தொடங்கினால் பணியாளர்களுக்கு சம்பளம், மின் கட்டணம், பராமரிப்பு செலவுக்கே போதாது என்பதால் பலரும் கடைகளை திறக்கவில்லை. கன்னியாகுமரியில் கைகளில் பொருட்களை ஏந்தி வியாபாரம் செய்யும் 1000க்கும் மேற்பட்டவர்கள் முடங்கியுள்ளனர். இவர்களில் பலர் சொந்த ஊர்களுக்கே திரும்பி சென்றுவிட்டனர்.
கன்னியாகுமரியில் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகள் மற்றும் தேவசம் போர்டுக்கு உட்பட்ட கடைகளில் விற்பனை நடைபெறும். இவற்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றவர்கள் தற்போது வாடகை செலுத்த இயலாத  நிலைக்கு வந்துள்ளனர். மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும், கடன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தேவசம் போர்டுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் நடத்துகின்றவர்கள் வருவாய் இழந்துள்ளனர். திற்பரப்பு அருவியில் நுழைவு கட்டணம் வகையில் பேரூராட்சிக்கும், அருகே உள்ள கடைகளில் உணவு பொருட்கள் விற்பனை, ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் வருவாய் இழப்பு போன்ற பிரச்னைகளை சந்திக்க தொடங்கியுள்ளனர். மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் பழங்கள் விற்பனை செய்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் வரத்து முற்றிலும் நின்றுவிட்டதால் அவர்களால் வியாபாரம் நடைபெறுகின்ற சாலையோர உணவுக்கடைகள், பழக்கடைகள் எல்லாம் வியாபாரம் குறைந்துள்ளது. கொரோனா எப்போது ஒழியும், சுற்றுலா தலங்கள் எப்போது மீண்டும் ஒளிரும் என்ற எதிர்பார்ப்பு வியாபாரிகளிடம் மட்டுமின்றி மக்களிடமும் எழுந்துள்ளது. கொரோனாவால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் மன முடக்கத்தில் இருந்து விடுபட ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர் நிச்சயம் சுற்றுலா தலங்களை நாடுவர் என்பது உறுதி.

1 கோடி பேர் வந்து சென்ற கன்னியாகுமரி
*  கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க ஆண்டுக்கு 70 லட்சம் முதல் 1  கோடி பேர் வருகின்றனர். வெளிநாட்டவர் மட்டும் ஆண்டுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம்  பேர் வருகின்றனர்.
* சுற்றுலா பயணிகளுக்காக 100க்கும் மேற்பட்ட தங்கும்  விடுதிகள் கன்னியாகுமரியில் மட்டும் உள்ளன. நாள் ஒன்றுக்கு ரூ.300 முதல்  ரூ.10 ஆயிரம் வரை கட்டணத்தில் வாடகைக்கு அறைகள் உள்ளன.
* கன்னியாகுமரியில்  பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் கன்னியாகுமரியில்  விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு சுற்றுலா சவாரிக்கு  படகுகள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம்  வரை 20.21 லட்சம் பேர் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர். ஜனவரியில் 2 லட்சத்து  58 ஆயிரம், பிப்ரவரியில் 1 லட்சத்து 51 ஆயிரம், மார்ச் மாதம் 70 ஆயிரம்  பேரும் படகு பயணம் மேற்கொண்டு சுவாமி விவேகானந்தர் பாறைக்கு சென்றுள்ளனர்.
* சுற்றுலா படகு பயண கட்டணம் ரூ.50, விஐபிகளுக்கு ரூ.100ம் கட்டணமாக  வசூலிக்கப்படுகிறது. இவை தவிர விவேகானந்தர் பாறை செல்ல நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
* கன்னியாகுமரியில் 4 மாதம் அதிகம் சுற்றுலா பயணிகள்  வருகின்ற மாதம் ஆகும். ஜனவரி, ஏப்ரல், மே மாதம் மற்றும் அக்டோபரில்  சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த காலகட்டத்தில் மாதம் 2  லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.

வெள்ளோட்டத்துடன் முடங்கிய படகு
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல வசதியாக 4 வது படகு தயார் செய்யப்பட்டது. ஏற்கனவே விவேகானந்தா, பொதிகை, குகன் ஆகிய படகுகள் போக்குவரத்தில் இருந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் உள்ள வேளையில் படகு போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதையடுத்து கோவாவில் இருந்து ரூ.8.50 கோடி மதிப்பில் ஏசி வசதி கொண்ட படகு தயார் செய்யப்பட்டது. தாமிரபரணி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படகு வெள்ளோட்டமாக விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை பகுதிக்கு சென்று வந்த நிலையில் அத்துடன் படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Kumari Disabled ,Corona ,merchants ,Air , Corona, Kumari, tourist attractions
× RELATED மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்...