திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கம் சிக்கியது!: சரக்கு பெட்டகத்தில் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை அதிரடி

திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக விலாசத்திற்கு விமானம் மூலம் அனுமதியின்றி அனுப்பப்பட்ட 30 கிலோ தங்கத்தை கேரள துங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுமார் 13 கோடியே 50 லட்சம் மதிப்புடையவையாகும். யூ.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியே கேரளவிற்குள் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து விமான நிலைய சரக்கு பிரிவில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மணப்பாடியில் உள்ள ஐக்கிய அரபு அமீரக அரசின் துணை தூதரக விலாசத்திற்கு அனுப்பப்பட்டிருந்த பெட்டி ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் திறந்து பார்த்தனர். அப்போது அங்கு 30 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ள சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமீரகத்தில் இருந்து திருவனந்தபுர விமான நிலைய சரக்கு பெட்டகத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த பெட்டியை யாரும் எடுத்துச்செல்ல வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தூதரக அதிகாரிகளின் பெயரில் தங்கம் கடத்தியது யார் என்று சரக்குப்பதிவு ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: