×

திருவனந்தபுரத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்.. மாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை .. : கேரளாவில் கொரோனா விரட்டும் பணிகள் தீவிரம்!!!

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று காலை 6 மணி முதல் கடுமையான முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

*திருவனந்தபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடனான தொடர்பு மூலம் புதிதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

*இம்மாவட்டம் பொங்கும் எரிமலையின் மீது அமர்ந்திருப்பது போன்ற ஆபத்தில் இருப்பதாக கேரள அமைச்சர் கே.சுரேந்திரன் அறிவித்ததையடுத்து இன்று முதல் கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கடைகள் யாவும் அடைக்கப்பட்டுள்ளன.

*திருவனந்தபுரம் மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் இன்று காலை 6 மணி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

*தலைமைச் செயலகம் மூடப்படுவதால், முதல்வரின் குடியிருப்பிலேயே முதல்வரின் அலுவலகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*இதுபோல நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பேருந்துகள் இயங்காது. அவசர, அத்தியாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

*கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக திருவனந்தபுரம் மாநகராட்சி இந்த திடீர் முடிவை அறிவித்துள்ளது.

*மருந்துக் கடைகள், மளிகை, காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் திருவனந்தபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை


*இதனிடையே பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை கேரள அரசு கொண்டு வர உள்ளது.

*தொடக்கத்தில் கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்திய முன்னுதாரண மாநிலமாக பெயர் பெற்று இருந்த கேரளாவில், தற்போது வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

*இதையடுத்து தொற்று நோய் சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்து அவசர சட்டம் ஒன்றை கேரள அரசு கொண்டு வந்துள்ளதாக திருவனந்தபுரத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

*அதன்படி, கேரளாவில் இனி திருமண விழாவில் 50 பேர், இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மட்டுமே பங்கேற்க முடியும். வீடுகளை விட்டு வெளியே வரும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம்.

*பொது வெளியில் எப்போதும் 6 அடி தூர தனி மனித இடைவெளியை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். கடைகள். வர்த்தக நிறுவனங்களில் ஒரே நேரத்தில் 25 பேருக்கு மேல் கூடக் கூடாது.

*கடைகள் அனைத்திலும் கிருமி நாசினி வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் கேரள வருவாய்த் துறையின் ஜக்ரதா இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.

*வேலை நிறுத்தம், தர்ணா, பேரணி, போராட்டங்களில் 10 பேர் மட்டுமே முன் அனுமதி பெற்று பங்கேற்கலாம். இந்த விதிகளில் எதனை மீறினாலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க அவசரச் சட்டத்தில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

*இந்த அவசர சட்டம் ஒரு வருடத்திற்கு அல்லது மறு உத்தரவு வரும் வரையில் நடைமுறையில் இருக்கும். முகக்கவசம், தனி மனித இடைவெளி ஆகியவற்றை கட்டாயமாக்கி தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ள முதல் மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Thiruvananthapuram ,Trivandrum Jail ,Corona ,Kerala , Thiruvananthapuram, Full Curfew, Amal, Mask, Prison, Kerala, Corona
× RELATED திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி