பரிசோதனை செய்யாததால்தான் தொற்று பரவியது கொரோனா அறிகுறி இருந்தால் பொதுமக்கள் மறைக்கக் கூடாது: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: கொரோனா அறிகுறி இருந்தால் பொதுமக்கள் அதை மறைக்க கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட போரூர் பகுதியில் நடத்தப்பட்டு வரும் மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கொரோனா நோய் தடுப்பிற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நோய் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றன. நோய்க்கு மருந்து இல்லாத நேரத்தில், பொதுமக்கள்தான் கவனத்தோடு இருக்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள், சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது உள்ளிட்டவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக பொதுமக்கள் செயல்படக் கூடாது.

கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும், மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நோய் தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எந்த காரணம் கொண்டும் மக்கள் அறிகுறி வந்தால் அதனை மறைக்க வேண்டாம். பிளாஸ்மா சிகிச்சை திட்டத்தை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பரிசோதனையை அதிகப்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தை பொறுத்தவரை இறப்பு விகிதம் குறைந்த அளவில்தான் உள்ளது. கொரோனா நோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் இறந்தவர்கள்தான் அதிகம்.

இந்த காலகட்டத்தில் மற்ற நோயால் இருந்தால் கூட, கொரோனா பரிசோதனை செய்து இறந்தவர்களின் பட்டியலில் வெளியிடுகிறோம். தமிழகத்தில் 12 வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் சிகிச்சை மையம், பரிசோதனை அதிகப்படுத்துதல் உள்ளிட்டவை மூலம் அதிக பயன் கிடைத்துள்ளது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அதிகளவு பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் மக்களின் கூடுதல் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதற்கு மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். அதுமட்டுமின்றி மக்கள் தொற்று பரிசோதனை செய்யாமல் இருந்ததால்தான் நோய் தொற்று பரவியது. தற்போது சிகிச்சை மையங்கள் மூலம் அதனை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* ஸ்கிரீனிங் பரிசோதனைக்கு 200 வாகனங்கள்

பின்னர், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: கொரோனா நோயால் உயிரிழந்தோரை அடக்கம் செய்வதில், தன்னார்வலர்களுடன் இணைந்து மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை தேவையான அளவு படுக்கை வசதிகள் உள்ளன. சிகிச்சை மையங்களும் போதுமான அளவில் இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலில், இறந்தவர்களின் உடலில் இருந்து நோய் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இறந்தவர்கள் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒரு வீட்டை தனிமைப்படுத்தும் போது, அவர்களுக்கு தேவையான பொருட்களை வர தன்னார்வலர்கள் மூலம் வாங்கி தருகிறோம். இதை கண்டு மக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. நோய் தொற்று பரவக்கூடாது என்றுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 12 ஸ்கிரீனிங் பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் மக்களை பரிசோதனை செய்து, மீண்டும் அவர்கள் வீட்டிற்கு செல்ல 4 மணிநேரம் எடுக்கிறது. இதனை 3 மணி நேரத்திற்குள்ளாக முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே 15 பேரை அழைத்து செல்லும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தலா ஒரு வாகனம் என 200 வாகனங்கள் மூலம் மக்களை ஸ்கிரீனிங் பரிசோதனைக்கு அழைத்து சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: