தமிழக வாகன ஓட்டிகள் மீது கர்நாடகா போலீசார் தடியடி: இ பாஸ் வைத்திருந்தாலும் அனுமதி இல்லை

ஓசூர்: கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்களை அம்மாநில போலீசார் திருப்பி அனுப்பினர். மீறி செல்ல முயன்றவர்களை தடியடி நடத்தி விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அம்மாநில போலீசார் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை, மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி சோதனைச்சாவடியில், தமிழகத்தில் இருந்து சென்ற இ-பாஸ் உள்ள டூவீலர்கள் மற்றும் கார்களை, கர்நாடக போலீசார் நேற்று தடுத்து மீண்டும் திருப்பி அனுப்பினர். மேலும், உத்தரவை மீறி செல்பவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு, இ-பாஸ் பெற்று செல்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு  செல்பவர்கள் அனைவரும் தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்படுவதால் மாநில எல்லையில் ஏராளமான வாகனங்கள் காத்திருக்கின்றன. மேலும், முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் மாநில எல்லையில் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்திலிருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், கண்டெய்னர்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் கர்நாடகாவுக்கு வழக்கம்போல சென்றன.

Related Stories: