×

சாத்தான்குளம் தந்தை, மகன் சாவு வழக்கு பென்னிக்ஸ் நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த தந்தை, மகன் சாவு தொடர்பாக பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐ போலீசார் விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார்  கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரரணி சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் அவர்கள் 5 பேரும் அங்கிருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தூத்துக்குடி சிபிசிஐடி போலீசார் இன்று மனுதாக்கல் செய்கின்றனர்.

நேற்று பென்னிக்ஸ் நண்பர்கள் சிலரை சிபிசிஐடி போலீசார் அழைத்து அவர்களிடம் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் அவரது நண்பர்களான ரவிச்சந்திரன், ரவிசங்கர், சங்கரலிங்கம், ராஜாராமன், மணிமாறன் ஆகிய 5 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. அவர்கள் இந்த வழக்கில் தங்களுக்கு தெரிந்த தகவல்களை சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இன்றும் அவர்களிடம் விசாரணை நடக்கிறது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த 18 பேர் பிரண்ட்ஸ் ஆப் போலீஸாக இருந்துள்ளனர். அவர்களில் தற்போது 12 பேர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள 6 பேரிடம் சிபிசிஐடி போலீசாரின் ஒரு குழுவினர் விசாரணை நடத்தினர்.

* இன்ஸ்பெக்டர் தப்பிய கார் பாஜ பிரமுகருடையது
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தப்பி செல்ல முயன்றபோது கங்கைகொண்டானில் பிடிபட்டார். அப்போது அவர் பயன்படுத்திய காரையும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் அந்த கார் சென்னை முகப்பேரை சேர்ந்த பாஜ நிர்வாகியான சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இதில் அவர் தனது காரை கடந்த 2017ம் ஆண்டே கோயம்பேட்டை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு வாடகை அடிப்படையில் கொடுத்து விட்டதாகவும், ஆனால் வாடகையும் வரவில்லை, காரையும் காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அந்த காரின் ஆவணங்களை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் கோயம்பேடு பாண்டியன் குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : friends ,CBCID ,Pattinas ,death CBCID police ,death , Sathankulam, Father, Son, Death Case, Pennix Friend, CBCID Police, Investigation
× RELATED கன்னியாகுமரி அருகே ஆபாசமாக திட்டியதால் கீழே தள்ளி கொன்றோம்