குவார்டருக்காக கொலை வெறி தாக்குதல் விவசாய கூலித்தொழிலாளியை விரட்டி தாக்கிய போலீசார்

அன்னூர்: கோவை அன்னூரில் விவசாய கூலி தொழிலாளியை போலீசார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சென்னப்ப செட்டிப் புதூரில்  வசிப்பவர் விசுவநாதன்(52). விசுவநாதன் காக்காபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவரது தோட்டத்திற்கு விவசாய கூலி வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் காக்காபாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கிக் கொண்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் பின் தொடர்ந்த 2 பேர் விசுவநாதனை வழிமறித்து தாக்கினர். விசுவநாதனின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த தோட்டத்து தொழிலாளர்கள் வந்து பார்த்தபோது விசுவநாதன் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

வாலிபர்களிடம், விசுவநாதனை எதற்காக தாக்குகிறீர்கள் என கேட்ட போது தான் போலீஸ் என்றும் அன்னூர் காவல்நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றுவதாகவும் கூறியதோடு, கேள்வி கேட்டால் உங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டியுள்ளார். விசுவநாதனிடமிருந்து 14 மது பாட்டில்களை போலீசார் பறித்து சென்றனர். சகதொழிலாளர்கள் படுகாயமடைந்த விசுநாதனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து விசுவநாதன் கூறுகையில், ‘‘போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கையால் கை, கால்களை தூக்க முடியாத அளவிற்கு காயமடைந்துள்ளேன். குவாட்டருக்காக என்மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

* எஸ்.ஐ எனக் கூறியவர் ஏட்டு

விசுவநாதனை பைக்கில் துரத்தி, தாக்கியவர் எஸ்.ஐ என கூறியுள்ளார். ஆனால், அவர் அன்னூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். அவருடன் பைக்கில் வந்தவர் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உளவுத்துறை போலீசார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்துள்ளனர். இது குறித்து எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: