×

10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் முழுமையாக எழுதவில்லையா? ஆப்சென்ட்

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை முழுமையாக எழுதாமல் இருந்தால் அந்த மாணவர்கள் ஆப்சென்டாக கருதப்படுவார்கள் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது இம்மாத இறுதி வரை நீடித்து வருகிறது. இதனால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று அரசு  அறிவித்தது. அதன்அடிப்படையில் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் சில சிக்கல்கள் உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தார்.

இதற்கிடையே, சில மாவட்டங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் தருவிக்கப்பட்டு தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் போடும் பணி தொடங்கியுள்ளது. மேற்கண்ட காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்து இருந்தார். ஆனால், அதிரடியாக தற்போது வேறு ஒரு அறிவிப்பை சுற்றறிக்கை மூலம் தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதன்படி, பத்தாம் வகுப்பில் படித்த மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை முழுமையாக எழுதாமல் விட்டிருந்தால் அந்த மாணவர்களுக்கு ஆப்சென்ட் என்று வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்துவிட்ட நிலையில், தற்போது ஆப்சென்ட் என்று போட வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளது மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

Tags : 10th Class, Quarterly, Half Yearly Examination, Not Written ?, Offensive
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...