லடாக் குறித்து ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, சர்வதேச, தேசிய அளவிலான முக்கிய விவகாரங்கள் குறித்து  பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர் கடந்த மாதம் 15ம் தேதி இந்திய படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். வீரர்களின் உயிரிழப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, லடாக்கில் இந்திய பகுதியை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே, பிரதமர் மோடி நேற்று முன்தினம் பதற்றமான சூழல் நிலவும் லடாக்கின் லே பகுதிக்கு சென்று காயமடைந்த ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து அவர் ஆய்வு செய்தார்.

அங்கு பாதுகாப்பு நிலவரங்களை பார்வையிட்ட அவர், ``எந்தவொரு நாடும் தனது எல்லையை அத்துமீறி விரிவுபடுத்தி கொள்ளும் போக்கிற்கு முடிவு கட்டப்பட்டு விட்டது’’ என்று மறைமுகமாக சீனாவை குறிப்பிட்டு எச்சரித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, அண்மையில் லடாக்கில் சீனா உடன் ஏற்பட்ட எல்லை பிரச்னை, நேற்று முன்தினம் லே சென்றது மற்றும் தேசிய, சர்வதேச விவகாரங்கள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கினார். பின்னர், இது குறித்து பிரதமர் மோடி அவரது டிவிட்டரில், `ஜனாதிபதி கோவிந்தை சந்தித்து முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசித்தேன்,’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories: