×

அமெரிக்க சுதந்திர தினத்தில் டிரம்ப் பேச்சு போராட்டம் என்ற பெயரில் நாட்டை பாழாக்கும் எதிரிகள்

வாஷிங்டன்: அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டத்தில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘போராட்டம் என்ற பெயரில் நாட்டையும்,  வரலாற்றையும் அழிக்க நினைக்கும் எதிரிகளிடமிருந்து தேசத்தின் நன்மதிப்பை மீட்டெடுப்போம்’ என சபதம் செய்தார். அமெரிக்காவின் 244வது சுதந்திர தினம், இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு கொண்டாடப்பட்டது. கொரோனா பாதிப்பால் வழக்கமான பிரமாண்டங்கள் இல்லாமல் எளிமையாக விழா நடத்தப்பட்டது. தேசிய நினைவிடம் அமைந்துள்ள மவுன்ட் ரஷ்மோரில் சுமார் 5 நிமிடங்கள் வாண வேடிக்கை நடந்தன. பாராசூட்டிலிருந்து வீரர்கள் இறங்கி நாட்டிற்கு மரியாதை செலுத்தினர். இந்த கொண்டாட்டங்களை காண குறைந்த அளவிலான மக்களே திரண்டிருந்தனர்.

கொண்டாட்ட நிகழ்ச்சிகளை அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோர் கண்டுகளித்தனர். பின்னர் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையில் கூறியதாவது: சீனாவில் இருந்து பரப்பப்பட்ட கொரோனா வைரசை எதிர்த்து அமெரிக்கா மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சவாலான இந்த நேரத்தில் அயராது உழைக்கும் நமது டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். விரைவில் நாம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து முடிவு கட்டுவோம். சமீபகாலமாக ,அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. போராட்டம் என்ற பெயரில் வன்முறையை கட்டவிழ்த்து நாட்டை பாழாக்க முயற்சிக்கின்றனர். தீவிர இடதுசாரிகள், அராஜக வாதிகள், கிளர்ச்சியாளர்கள், எந்த துப்பும் இல்லாமல் தவறு செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள் ஆகிய எதிரிகளை தோற்கடிக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம்.

போராட்டத்தின்போது தலைவர்களின் சிலைகள், நினைவுச் சின்னங்கள் உடைக்கப்படுகின்றனர். நம் நாட்டை கட்டி எழுப்பியவர்கள் அனைவரும் ஹீரோக்கள். அமெரிக்காவில் இருக்கும் கோபமடைந்த ஒரு கும்பல் நம் வரலாற்றை அழிக்கவோ, நம் குழந்தைகளுக்கு அறிவுரை கூறவோ, நமது சுதந்திரங்களை மிதிக்கவோ ஒருபோதும் அனுமதிக்க கூடாது.  1492ம் ஆண்டில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த போது தொடங்கிய அமெரிக்க வாழ்க்கை முறையை பாதுகாப்போம். நம் நன்மதிப்பை கட்டிக் காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

* இந்தியாவை நேசிக்கிறோம்
அமெரிக்க சுதந்திரதினத்தையொட்டி அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த டிரம்ப், தனது டிவிட்டரில், ‘நன்றி நண்பரே, இந்தியாவை நேசிக்கிறது அமெரிக்கா’ என பதிலளித்துள்ளார். இது இந்தியா, அமெரிக்கா இடையே பலமான நட்புறவு நிலவுவதை சுட்டிக்காட்டுவதாக சமூக வலைதளங்களில் பலர் புகழ்கின்றனர்.

* மீண்டும் போராட்டம்
இதற்கிடையே, கொண்டாட்டம் நடந்த பகுதிக்கு அருகே சில போராட்டக்காரர்கள் குவிந்து டிரம்ப்புக்கு எதிராக இனவெறி கோஷம் எழுப்பினர். கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு டிரம்புக்கு எதிராக கோஷமிட்ட அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒருபக்கம் கொரோனா வைரஸ் தீவிரமாக இருக்கும் நிலையில் போராட்டம், டிரம்ப்பின் கோபமான பேச்சு, பீச் உள்ளிட்ட பொது இடங்களில் கூட கட்டுப்பாடு என சுதந்திர தின விழாவை அமெரிக்கர்கள் கழித்தனர்.

Tags : country ,American Independence Day , American Independence Day, Trump Speaks, Struggles, Ruins the Country, Enemies
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...